Tuesday, 30 April 2013

பாடல்

அவள் மேனியில் மீட்ட தொடங்குகிறேன்
இரவின் பாடல்களை;
அவள் உயிரிலிருந்து பிரவகிக்கும்
ஒரு நதியின் நீர் வீழ்ச்சியில்
ரம்மியமான பெரும் இசையில்
கலந்து
கரைந்து
காணாமல் போகிறது
என் பாடல்!
என் எல்லா இரவுகளின் எல்லா பாடல்களும்!

என்னைத்தான் தேடுகிறேன்,
உருவம்தான்
உன்னுடையது!

அதே காற்று!

முன்பு ஆலமரம் நின்றிருந்த இடத்தை
இன்று கடந்த ,பழைய காற்றில்
இலை சத்தத்தின் ஞாபங்கள்
பதிந்திருக்கும்தானே!

சித்தன் போக்கு

வெயில்காலம் தொடங்கிவிட்டதால்
இனி வெயில்தான்!
மழைக்காலமாகிவிட்டால்

மழை!

வாழ்க்கை

"போதும் " என்கையில் முடிவதில்லை.
"வேண்டும்" என்கையில் கிடைப்பதில்லை!

நகர்தல்

பூ உதிரும்
இலையுதிரும்
ஓர் நாள் ,
செடியும் உதிரும்

மழைக்காலம்

உன்  நினைவுகளின் வெக்கை
சுட்டெரிக்கும் இக்கணங்கள்
வெயில்காலமாகி விட்டது.

நீ நேசத்தை
கொட்டி தீர்த்த,
மழை "காலமாகி"விட்டதால்

மழைக்காதலன்

முதல் மழையில் நனைந்தால்
ஜலதோஷம் வருமென்று,
அவள் நனையாமல்
ஒதுங்கும் நாட்களில் 
அழுகைதான் வந்ததாம்
மழைக்கு !

பெண்ணே, வெளியே போய்
வானத்தை
எட்டி பார்த்துவிட்டு வாயேன்,
மின்மினி பூச்சிகள் கொண்டுவரவில்லையா
நட்ச்சத்திரத்தின் தூது

வாழ்நாள்

தொலைதூர பயணப்பாதையில் பதிந்த
இரு பாதச்சுவடுகளின் இடைவெளியில்
இங்கே வசிக்கிறேன் .

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

ஓடிக்கொண்டேயிருங்கள்
அதுதான் நல்லது.
நின்றுவிட்டால் தெரிந்துவிடும்
தொலைத்ததின் கூட்டத்தில் 

வாழ்க்கையும்
தொலைந்ததின்   கூட்டத்தில்
நீங்களும் இருப்பீர்கள்!

தேவதை உறக்கம்

மின்விசிறி காற்றில்
பறந்துயர எத்தனித்தபடி 
படுக்கை விளிம்பில் 
அவள் சேலை சிறகுகள்.
கண்கள் கூசிடாத அவள் ஒளிவட்டத்தை
இரவு விளக்கு தாங்கி பிடிக்க

வரமொன்று தந்துவிட்டு
அசதியாய்  உறங்குகிறாள்
என் தேவதை .

என் மார்மீது படர்ந்து கிடக்கும் 
இந்த கைகளில்மீது
என் கை வைத்தால்
வலிக்குமோ என்னமோ!

என்னைத்தான் தேடுகிறேன்,
உருவம்தான்
உன்னுடையது!

ஆனந்தவர்ஷினி

முற்றத்தில் ,
நான் எங்கு நின்றாலும் 
அதுவே அவள் வாகனத்தின் சாலையாகிறது.

***


"ப்பேம்ப்பேம்""கீ க்க்கீய்" யென்று

நிகழும் விபத்துகளில்
ஆனந்தமாய் விழுகிறேன்
"பாப்பா"வின்  உலகத்தில்

என் கவிதைகள்

நிலா கிடைக்கும் ,
சோறும் கிடைக்கக்கூடும்,
"நிலாச்சோறு" கிடைப்பதில்லை
அனாதை பிள்ளைக்கு
நீயில்லாத எனக்கும் அப்படியே!

அசல்

கெட்டவனென்றோ நல்லவனென்றோ
பெயரிடுங்கள் எனக்கு
அது உங்கள் விருப்பம்.
போலியாய் இருப்பதில்லை நான்
அது என் விருப்பம்!

இருவருக்கும் பொதுவானவை
சில குற்றச்சாட்டுகள்
சில தண்டனைகள்
சில வலிகள்!

எப்போதுமே,
என் கன்னத்திலோ
கைகளிலோதான் விழும்
மழையின் முதல் துளி
கண்களில் விழுந்தவள் அவள்!

நான் பிடிக்காத "பிரேக்"கிலும்
அணைத்துக்கொள்பவள்
அவள்.

நேற்று முழுதும் குடித்திருந்தேன் 
ஒன்றும் ஞாபகமில்லை!
இன்றைய பகல் பொழுதுகள்
ஒரு உஷ்ணக்காற்றைப்போல் 
சுழன்று சுழன்று
திக்குகளற்று திரிந்தேன்.
இரவும் நிலவும் பசியோடிருப்பதையறிந்து
நானிங்கு வந்தேன்.
என் இதயத்தின் இறைச்சித்துண்டு கிட்டாமல்
நீயும் பசித்திருப்பாயே,
அதை, என்னால் தாங்க முடியுமா!

விதி

அதிகபட்சம்
ஒரு தேர்ந்தெடுத்தலோ,
குறைந்தபட்சம்
ஒரு நிராகரித்தலோ போதுமானது
அனைத்தும் நடந்துவிட!

நாங்கள் ,குளித்து கரையேறும்வரை
அவள் காத்திருந்தாள்.
பின்பு,குளித்தாள்!

நாங்கள் குளித்து கரையேறும்வரை
குளமும் காத்திருந்தது!

முழுதாக உறிஞ்சிவிட்டு
வீசுபவளை ,
நாம் தானே தேர்ந்தெடுத்தோம்!
ஹ ஹ ஹ!

ப்ப்ப்ப்போடீ

"போடி" என்றால்
போகாதேயென்று அர்த்தம் .

"போடி" என்றால்
போயித்தொல என்று அர்த்தம் .

"போடி"
"போடி" !

பெரிய இடம்

அவர்கள்  "பெரிய இடம்" என்பதால் ,
அவர்கள் குசு நாறாது!
சமயத்தில் மணக்கவும்கூடும்!

பூந்தொட்டி பூச்செடிகள்

துளிர்க்கலாம்,
மொக்கு விடலாம்,
மலரலாம் .
இருந்தும் என்ன? 
சுதந்திரமாக இல்லை;
வேர்!

நான்

கெட்டவனென்றோ நல்லவனென்றோ
பெயரிடுங்கள் எனக்கு
அது உங்கள் விருப்பம்.
போலியாய் இருப்பதில்லை நான்
அது என் விருப்பம்!வார்த்தைகளில்லா தருணங்களில்
ஸ்பரிசங்களில் வெளிப்படும்
அவள் காதல்
மெல்லிய புன்னகையோடு!
மீண்டும் முத்தமிட்டு தொடங்குவேன்
என் காதலை!

என்னை வைத்து விளையாடி
காதல் சூதில்
தோற்றுப்போனேன்,
இப்பொழுது நடக்கும் யுத்தத்தில்
செத்து விழுகின்றன
கவிதைகள்!

சில நேரம்
இதழ்கள் அமைதிப்புறா
காதலில் மட்டும்!

இரண்டு விரலில்
ஒன்றை தொட சொல்லிவிட்டு,
எதைத்தொட்டாலும்
முத்தம் தரும் திருட்டுப்பயல்
என்னவன்

Friday, 19 April 2013

வசை சொற்கள்

உன்னை கொஞ்சும் வார்த்தைகளை,
ஒரு குழந்தையிடமோ,
பூவிடமோ,
நிலவிடமோ
நண்பர்களிடமோ கூறி விடலாம் ,
உனக்கே உனக்கு மட்டுமான
வசை சொற்களை
யாரிடம் பங்கிட முடியும்?
விட்டு விலகி
தனிமையில் நடக்கும்
இத்தருணத்தில்
"நாய் "என்பதும்
"எருமை" என்பதும்
"பிசாசு "என்பதும்
என்னை மட்டுமே குறிக்குமென
வசை சொற்க்களெல்லாம்
என்னை வசைபாட தொடங்குகின்றன.

வாடிவாசல்

வெறுப்பில், கோபத்தில்
பெருங்கதவு அடைக்கும்போதெல்லாம்
உன் காதல் கோவிலில்
அன்பின் வாடிவாசல்
திறந்தே வைத்திருக்கிறாய்
எனக்கே எனக்காக.

அறுந்த சிறகுகள்

அந்த நியான் விளக்கு வெளிச்சம்
அதன் மேலே
தொலைபேசி கோபுர உச்சி விளக்கு
அதன்மேல்
ஒரு விமானம்
அதன் மேலே
நிலா
அதற்க்கும் மேலே
நட்சத்திரம்
பார்வையால் பறக்கமுடியும்,
நம்புங்கள்
வடிவமாய் ஒருத்தி கடக்கையில்
புணரவும்.

"இனிப்பு கனவுகள்" என்று
நீ சொல்லிய இரவுகளில் 
தன் படையோடு உள் நுழைந்து
கனவு தின்கின்றன
உன் நினைவு எறும்புகள்.

the receptionist

வரவேற்ப்பாளினியாய் வேலை செய்யும் அவள்,
ஒரு ஒற்றை புன்னகைகூட தந்ததில்லை எனக்கு ,
திரும்ப திரும்ப கேட்கப்படும் ,சலிப்பூட்டும்
அதே பத்து கேள்விகளுக்கு
சலிக்காத மொழியில் புன்னகைத்தபடி
நிறுவன தொலைபேசியில் பதிலளிக்கிறாள்! 
வளர வளர பறிக்கப்படும் தேயிலை போல,
அவள் புன்சிரிப்பும் பறிக்கபடுகின்றன! 
நிறுவன வாடிக்கையாளனின்
தின்னும் பார்வைகளை பொறுத்தபடி
அவனுக்கும் புன்னகையாய் பதிலளிக்கிறாள்,
பறித்து முகரப்படும் ஒரு பூவாய்
மீண்டும் மீண்டும் அவள் புன்னகை,
புன்னகையெல்லாம் புண்ணாய் மாறிப்போன
ஏதோ ஒரு தருணத்தில்
அவள் புன்னகைப்பதை மறந்திருக்கக்கூடும்,
அவள் எனக்காய்
ஒரு புன்னகை கூட தந்ததில்லை,
காதலின் அடையாளமாய்,
எரிந்து விழுந்தால்கூடப்போதும்
ஏற்றுக்கொள்வேனென்று
யாரேனும் சொல்லுங்களேன்
அந்த வரவேற்பாளினி காதலியிடம்!

துரிதமாய் வேலை செய்கையில்
அடிபட்டு
"குபுக்"கென பீறிடும்
ரத்த துளிகள் போல,
என் நினைவுகள்
அவளுக்கு வரவழைத்திருக்கலாம்
கண்ணீரை
விரல்களில் துணிசுற்றி
"பாத்து வேல செய்ய மாட்டியா!"
என்று ஆதங்கப்படும்
ஓரு நட்பு என் அருகிலிருப்பதுபோல்,
ஆறுதல் படுத்தவோ
அணைக்கவோ,
அவளுக்கும் கொடு
ஒரு நட்போ, காதலோ
வேண்டுவதற்க்கு வேறொன்றுமில்லை இனி
வெகுதூரம் கடந்தபிறகு!

காலமும் தூரமும்!

நமக்கும் புத்தனுக்குமான
கால இடைவெளி,

ஒரு நொடி.

தூரமோ, ஒரு காலடி!

பித்த நிலை முற்றிய தருணமொன்றில்,
பசியோடு கைநீட்டும் முதியவர் முகத்தில்
வெந்நீரை ஊற்றி துரத்தும் அளவுக்கு
கொடியவரில்லை
நம்மில் யாரும்,
எப்போது வேண்டுமானாலும்
யார் மீது வேண்டுமானாலும்
வீசப்படலாம்
உள்ளே கொதித்துக்கொண்டிருக்கும்
சில வார்த்தைகள்

ஒவ்வொரு துளி மது உள்ளிரங்கும்போதும்
ஒவ்வொரு துளி கண்ணீர் வெளியேறலாம்
சில நேரங்களில் உங்களுக்கும்.

காரணப்பெயர்

உன் பெயர் வெளிச்சத்தை குறிப்பதால்,
நான் இருட்டில் வாழ்கிறேன்.

அவள் பெயர் பாடலை குறிப்பதால்
ஒப்பாரிக்கு ஆசைப்படுகிறேன்!

வெளிச்சம் என்பது
குறைந்த ஒளி.

ஒப்பாரி என்பது,

நான் கேட்காத எனக்கான பாடல்!

அதே பறவை

அந்த மரத்தின்
அந்த கிளையில்
பழத்தை கொத்தி பறந்த
அந்த பறவை
மீண்டும் வரவேயில்லை .
வராது!

சிவ சித்தார்த்தன்

குட்டியானை பிடித்து,
முன்பக்க தென்னையில்  கட்டி,
அதுக்கு கொஞ்சம்,
"ம்பே ம்பே"

காக்காவை விரட்டி
"க்கா ,க்கா"

குருவிக்கு கொஞ்சம் கொடுத்து
"க்கீ. க்கீ"

சிவ சித்தார்த்தனும்
குட்டி யானையும்
குருவியும் பால் குடித்துறங்க ,
நானும் காக்கையும் மட்டும்
விழித்திருந்தோம்!

பூமியே, உன் காலின் கீழ்தான் என்றோ,
பூமிதான் உன்னை சுமக்குது என்றோ
எப்படி வேண்டுமானாலும் சொல்
உன் பக்குவத்தை பொறுத்தது அது  !

உன் மீதான
காதலை வைத்திருக்கும்  என்னையும்
என்னமோ சொல்
உன் விருப்பம்!

தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்
புணர்ச்சியின் உச்சத்தில்
பீறிடும் இறைவனை
ஏற்றுக்கொள்வதில்
பெருந்தயக்கம் உங்களுக்கு!

ஓம் சாந்தி, சாந்தி சாந்தி.

அவள் முலைகள்தான்
உயிர் வளர்க்கும்!

ஆதியாகி

ஏன் பிறந்தேன்
என்ற கேள்விக்கு
ஏதொ ஒரு பதிலை உருவாக்கலாம்
எங்கே பிறந்தேன் என்பதற்க்குத்தான்
விடை கிடைப்பதில்லை எனக்கு!

அனாதை கவிதைகள்

அதே பழைய கதைதான்!
வார்த்தைகளில் புகாத,
அர்த்தங்கள் விளங்காத
குறை பிரசவத்தில்
பிறந்த கவிதையொன்றை
நேற்று ,எங்கோ வீசி விட்டேன்.

வளர்ந்து பெரியவனாகி
இன்று காலை வந்து
என் முகத்தில் உமிழ்ந்துவிட்டு போனதது!

தனிமையிருத்தல்

அந்த நிலையத்தின்
கடைசி தொடர் வண்டியில்
நானும் ஏறிய பின்னே,
தனியாக அமர்ந்து
தண்டவாளங்களை பார்த்தபடி
என்ன நினைத்துக்கொண்டிருக்குமோ
அந்த நடைமேடை இருக்கை .

தனிமை ,தற்கொலை எண்ணத்தை தூண்டுமோ?
அல்லது ,தனிமையில் இருப்பதே
ஒரு வித தற்க்கொலைதானோ?
யாருமற்ற கடற்கரையில் 
அலையும் காற்றும் பேசுமோ என்னவோ!
யாரும், யாருமற்று வாழ்வதில்லை
எப்போதும்! 
அடுத்த தொடர்வண்டி வரும்வரை.
அடுத்த சிறுவன் காத்தாடி விடும்வரை,
அடுத்த குழந்தை
கால் நனைத்து விளையாடும்வரை 
இருக்கையும் ,காற்றும் ,அலையும் போல
நானும் காத்திருப்பேன் ,
ஒரு நாள் வரும் ;
நீயும் வருவாய்!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

உண்மைகள்

ஹோ! என்ன பெரிய வித்தியாசம்?
நேற்றைய உண்மை,
இன்றைய பொய்!
இன்றைய உண்மை
நாளைய பொய்.

Saturday, 6 April 2013

கண்ணுக்கு புலப்படாமல்
மிக நுண்ணியதாய்
அடைகுறிப்புக்குள் சில வார்த்தைகள்
நமக்காய் காத்திருக்கின்றன,

"விதிமுறைகளுக்குட்ப்பட்டது"

"கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது"

எதில்?
எல்லாவற்றிலும்!

*நயன்தாரா*

எங்கேயும், எப்போதும்
உடைவதில்லை  சங்கிலித்தொடர்,
"வியாபார யுக்தி" எனப்படும்
ஏமாற்றும் தந்திரங்களின்
சங்கிலித்தொடர்.
என்னிலிருந்து உனக்கு
உன்னிலிருந்து அவனுக்கு
அவனிலிருந்து
மீண்டும் எனக்கு!
***

இக்கவிதையின் வினைபயன் என்னவாகும்?

காலத்தீயில்
இதயம் வேகும்  வாசனை
பழைய புகை குழாய் போல

பழைய பிரபஞ்சம் .
வெண்மையாகவோ, கருமையாகவோ
வெளியேறியபடி உயிர்கள்!
யார் சமையல்?

அவனை ஏன் முத்தமிட அனுமதிப்பதில்லை?

 

# முத்தத்திலிருந்துதான் தொடங்குவான்

#ஏதேதோ கதைபேசி கன்னம் கிள்ளுவான்

# முத்தம் கொடுக்க அனுமதித்தால் கடித்து வைப்பான்

# கன்னத்துக்கும் உதட்டுக்கும் அதிக தூரம் இல்லையென்பான்.

#ஒரு கோடி முத்தம் தர ஆசையென்று சொல்லி , ஒன்றோடு நிறுத்துவான்,

#அந்த ஒரு முத்ததில் ஆசை தூண்டி ஒராயிரம் கேட்க வைப்பான்

# அழகழகாய் கவிதை சொல்லி , சிறகொன்றை பரிசளிப்பான்,

#கிளுகிளுப்பாய் கதைசொல்லி கிச்சு கிச்சு மூட்டுவான்,

#இன்னும்…………இன்னும் ......... எத்தனை காரணங்கள் ,
அது தனிமையில் வெட்கங்கள்,
ரகசிய புன்னகைகள்.

#படுபாவி, கொலைகாரன்

அவனை முத்தமிட அனுமதிக்கவும் இதுவெல்லாம்தான் காரணம்!

சுய அறிமுகம் செய்துவிட்டு
புன்னகைத்தபடி கைகள் நீட்டும்
அவர் பெயரில்,
உன் பெயரின்
மூன்று எழுத்துக்கள் இருந்தன,  
புன்னகைத்தபடி ,
இறுக பற்றிக்கொண்டேன் நான்!

"டேய்" என்பதை விட பாசம் இல்லை ,
"ச்ச்சீ" என்பதை விட வேஷம் இல்லை.

நட்சத்திரமும் நிலவும் தொலைதூரம்,
அவனற்ற இரவுகள்
அமைதியாகவே கழியும்
"ஏதுமற்று"!

"என்னைபற்றி, நினைக்கவே நேரமில்லை;
.
.
.
.
.
எனக்கு! இப்போதெல்லாம் உன்னை பற்றி மட்டும்தான்!

நீ வைத்தாலென்னா,
உடைத்தாலென்னா,
உனக்கு தந்ததை
இனி "என்"மனமென்று
எப்படி சொல்லுவேன்?

அலுவலக நேரத்தில்
உனக்குள் கிடக்கிறேன் ,
.
.
.
.
.
"இனி ,என் சட்ட போட்டா ஒதைப்பேன் எருமெ".

மழைநீர் சேமிப்பு என்பது 

உள்ளங்கையிலிருந்து
வழிந்து விழுந்த மழைநீர்

ஒரு நொடி ,
அவளை சேமித்ததா?

நீ கேட்ட, தாமரை கொய்து
கரையேறும் தருணம்
எனக்காய் நீட்டினாய்,
கண்களில் இரு தாமரை ,
ஆளை உள் விழுங்கும்
அழகால் ,ஒரு குளம்!

"வலிக்கத்தான் செய்கிறது ஆனாலும்  இதுதான் நல்லது"
ஒரே சிந்தையில் நகர்ந்து செல்கிறோம் நாம்!

அந்த பட்டாம்பூச்சியின் சிறகிலும்,
அந்த  குளவியின் கூட்டிலும்
இவ்வெயிலின் உஷ்ணம் 
படருமென்பதால்
எனக்கும் இவ்வெயில் கொடுமையே.

ஒரு துணை வேண்டும் எல்லோருக்கும்;
பாதுகாப்பான ஒரு தூரத்தில்
பாதுகாப்பாய் ஒரு துணை!

அவள் உங்களுக்காக
ஒரு பூந்தோட்டதை உருவாக்குவாள்,
பிறிதொரு நாள்
கள்ளிச்செடிகளின் மத்தியில்
அமர்ந்திருப்பீர்!

எல்லா கதவுகளும் அடைத்துவிட்டு,
ஜன்னலொன்றை திறந்துவைத்தபடி
அவனை காத்திருக்கும்
அவள் காதல்!

கெட்ட பையன்

சில நல்ல பழக்கங்கள்
அவளை எரிச்சலூட்ட,
சில கெட்ட பழக்கங்கள்
அவளை வெட்கப்படுத்த்தும்!
காதல் ,
ஒரு நல்ல,
க்க்க்க்க்க்க்கெட்ட்ட்ட்ட்ட்ட பழக்கம்

இரு விரல்கள் பிரிகையில்
மரணவலி
காதல் பெருநோய்!

வானவில்

*முத்தத்தின் வர்ணங்கள்*

முத்த சாயம் அப்பி அப்பி,
என் வெட்க சாயம் மறைத்துவிட்டான்,
இன்னும் ,எனக்கான எத்தனை முத்தங்கள் 
வானில் தொலைத்தானோ,
சிதறிகிடக்குது
ஏழு நிறம்

"கொம்பு மொளைச்சிருமென்று"
நீ தலை முட்டிய தருணத்தில்
அப்பாவுக்கு
சிறகுமுளைத்ததடி தங்கமே!
<3

 
உமையின் சங்கல்ப்பங்களில்தான்
உலகங்கள் உருவாகி
அழிகின்றன!

***

"அச்சச்சோ, வெதைய முழுங்கீட்டியா?,
வயித்துக்குள்ள மரம் மொளைக்கும் பாரு"  !