Wednesday 4 September 2013

ஆறுதல்

என் பக்கத்து நியாயங்களை யோசனை கூட செய்யாமல்
முள் வார்த்தைகளை வீடு முழுதும் எறிந்தாய்.

வாசலில் தானே நின்றிருந்தேன் ,
ஏதும் பேசாது "வெடுக்" கென கிளம்பி சென்றாய்.

"சாப்டியாடீ?"  மதியத்து தொலைபேசிக்காய் காத்திருந்தேன். 

அவரைக்காய் பொரியலை பற்றி ,
ஏதும் சொல்லாமல்
திரும்பி படுத்திருக்கிறாய் .

பாப்பா, சாப்பிட்டாளாவென்று கேட்க கூட  தோன்றவில்லை ,உனக்கு  !!! 

உன் முன்  கோபம்  ,
முரட்டுத்தனம் ,
குருட்டு பிடிவாதம்
இவற்றையெல்லாம் விட ,அதீதமான அன்பை
என் மீது வைத்திருக்கிறாயென்று தெரியும் .
அதுபோல் இல்லையெனினும் ,உளறிக்கொட்டாதே.

அப்படி நம்பிக்கிடப்பதில் ,எனக்கொரு நிம்மதி!

பசி


தின்கிறது பூமி
தின்கிறது காலம்
தின்கிறாய் நீ
தின்கிறேன் நான்
தின்கிறது வாழ்வு
தின்பது வாழ்வு 
தின்பதற்கும் ,தின்னப்படுவதற்கும்
ஒரு ஒற்றுமை
இரண்டும் ஒன்றுதான்!

கொலை

கொஞ்சமேனும் தயைகூர்ந்து
அமைதியாய் இருங்கள்
என்னை தனித்து விடுங்கள்
கண்கள் மூடிக்கொள்கிறேன் .பின் ,
உங்கள் விருப்பம் போல்
அழவே சிரிக்கவோ செய்யுங்கள் .

வலி

வரண்டு வெடித்துக்கிடந்த /
அந்த தாமரைக்குளம் /
நேற்றைய மழையால்  நிறைந்து கிடக்கிறது .  /
மண்ணோடு கிடந்த/
பழைய  ,மீன் முட்டைகள் விரிந்திருக்கலாம்/
குஞ்சு மீன்கள்   /
தாய்மீனை தேடுமே/
ஐயோ,நான் என்ன செய்வேன்  ?

நீ,நான்

கொடுமைக்காரி நீ
மறதிக்காரன் நான்.

நாளைய வேடிக்கை





இன்று,அந்தி வானின்
வண்ணக் குழம்பை 
வேடிக்கை பார்க்கையில்
வண்ணத்துபூச்சியின்
ஒற்றை சிறகொன்று
கற்றில் மிதந்துவந்து,
கையில் விழுந்தது .
என் ஜன்னல் வழி
உள் நுழைந்தது
இருள்.

போடீ, நீயொன்றும் தேவதையில்லை!

தேவதைகளின் தேசத்தில்,

மிக அழகான தேவதையை

உன் பெயரிட்டு அழைக்கயிலே,

உன்னை,
"வெறும்" தேவதையென்று

சொன்னது யார்?

"அய்யோ! என்னடீ, இன்னிக்கி இவ்ளோ அழகாருக்கே!
"பிறர் "கண் பட்டுவிடுமே "தங்கமே!

கன்னத்தில் ,ஒரு திருஷ்டிப்பொட்டு
.
.
.
.
உதடுகளால்.

என் "கண்ணுப்படுவதற்காகவே "
அழகாய் ,பிறந்தவள் நீ.
உன் கண்ணில் படுவதற்காகவே
தவமாய் கிடப்பவன் ,நான்.

இதயம்

காதலெனும் பூச்செடியுமில்லை
பிரிவுயெனும் முட்செடியுமில்லை
துக்கமெனும் புதர்களுமில்லை
வேரோடு பிடுங்கி எறிந்தாகி விட்டது

விளைநிலம் வீணாய்போகட்டும்
கவலையில்லை!

பிம்பங்கள்

நீங்கள் குடிக்கிறீர்கள் , நானும் .
நீங்கள் புகைக்கிறீர் ,நானும் .
உங்களுக்கும் காமம் ,
பசி......
துக்கம் .......
சிரிப்பு .......எனக்கும் அதே .
உங்களிடம் ,சினேகமாய் புன்னகைக  முடியும் .
அந்நியமான பார்வையை
உங்களாலும் அகற்ற முடியும் . இருந்தும்,
குளியலறைக்குள்
தனிமையில் புலம்பி 
கொக்கரித்து
சுவரிடம் பேசி
கதையொன்றில் அழுது
பைத்தியம் மறைத்து வெளியே வரும்
என்னை போல்தான் நீங்களென
விலகி நகர்கிறேன் .
நீங்களும்…………………

சந்தை

வார்த்தைகள் விழுந்து சிதறியதும்
ஒரு பேரிரைச்சல்
பின் ,கனத்த அமைதி.

கவிதையும் அந்த கவிஞனும்

வெற்றிகரமாய் சுட்டிக்காடுவது
கவிதை
பற்றிக்கொள்ள தவறிவிட்டவன்
கவிஞன்.

ஏளனம்

வெறிகொண்டு வெட்டியெரி,
அழித்துவிட்டதாய் ஆர்ப்பாட்டம் செய் 
அடுத்த மழைக்கு
மீண்டும் முளைப்பேன்
சிறு புல் தான் நான்.

ஒரு வரி





"இறைவன் மெளனமாய் புன்னகைக்கிறான்".