Thursday 27 June 2013

இரண்டாம் திருமணம்

திருமண புகைப்படங்களை
முழுதாய் பார்த்தபின்
தன்னை காணவில்லையென
அழத்தொடங்குகிறாள்
ஆனந்தவர்ஷினி குட்டி 
மாலைமாற்றி,
விரல் கோர்த்து
கட்டில் சுற்றிவந்து
கன்னத்தில் ஆசி வாங்கி
மீண்டுமொருமுறை நடந்தேறியது
மகள் தலைமையில்
எங்கள் திருமணம்!
"தம்பி பாப்பா வேணுமா?
தங்கச்சி பாப்பா வேணுமா?"
கேட்டுக்கொண்டிருக்கயில்
வெட்கத்தில் சிணுங்குகிறாள்
புதுப்பெண்.

இனி ,நீ
காறி உமிழ்ந்தாலும்
கவலையில்லை.
என்னை ,
சந்தோஷமாக ஓடும்
ஒரு சாக்கடையாக
எண்ணிக்கொள்வேன்!
ஹ ஹ ஹ

கம்பளிப்பூச்சி

அந்த கம்பளிபூச்சி
மெதுவாய்
ஊர்ந்து நகர்கிறது
உள்ளுக்குள்.




எல்லோரிடமும்
"ஏதோ" ஒரு கம்பளிபூச்சி!

மீதம்

ஒரு புன்னகை
சம்பிரதாயமான  நலம் விசாரிப்புகள்
பின் ,அவரவர் தனிமைக்குள் விழுந்துவிட்டோம்

கிணற்றில் கல் எறிந்த சப்தம் போல
ஏதேதோ பேச்சு
அன்றைய ,ஏதும் நினைவிலில்லை!
சேமிப்பாய் இப்போதைக்கு
அந்த  புன்னகை முகம்!

கணக்கு

இருளில் வாழ்பவருக்கும்
வெளிச்சத்தில் இருப்பவருக்கும்

ஒரே நாள்தான் !

இருளும் ,வெளிச்சமும் பாதி பாதி
ஆதியும் ,அந்தமும்
யாருக்கும் தெரியாது!

நான்

அழுதேன்; உண்மையில்லை
சிரித்தேன் ;உயிர்ப்பில்லை
திரும்பி நடந்தால்
துணையில்லை !

நீயோ,
எப்போதும்(போல)  புன்னகைக்கிறாய்!

பிரிவின் ஆறுதல்

மறைத்து வைத்த காதல்
செத்து மிதந்து நாறும்
பாழும்கிணறு ,என் இதயம் .
உன் பங்குக்கு
ஏதேனும் குப்பையை
வீசிவிட்டு போ 
அதோடு கொஞ்சநாள் வாழ்கிறேன்.

பக்குவம்

எப்படியோ "ஒருவழியாய்"
வலிகள் தாங்கும் ,பக்குவம் வந்துவிட்டது,
கொஞ்சம் பொறு
சிரிக்க பழகிவிடுகிறேன்
பின் ,உன் விருப்பன்போல்
கொடுமைபடுத்து
மகிழ்ச்சியாய் அனுபவிக்கிறேன்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

தீவும் கடலும்

நீ ,யாரோடும் சேராத தனி தீவு
இருந்துவிட்டு போ
நான் கடல்.

வியப்பு

நீ சொல்கிற ,

அனைத்தும் .........

அச்சர்யமாகிவிடுகிறது 

எனக்கு.

காதல்

நீ கேட்காத  கேள்விகளுக்கெல்லாம்
வெட்கமொழியில்
பதிலெழுதிக்கொண்டிருக்குது இதயம்

வெட்கம்

"மறைத்து வைத்ததை "
காட்டிக்கொடுத்தது
புன்னகை.

மியாவ்

எத்தனை காலம் கடந்தால் என்ன? 
எத்தனை தூரம் விலகினால் என்ன? 
மீண்டும் உன்னை பார்த்ததும்,
பரிச்சயமான பூனைகுட்டி
மடியில்வந்து அமர்வது போல
மனதில் வந்து சிரிக்கிறது
உன் மீதான ப்ரியம்.

வரமும் சாபமும்

சொர்க்கமும் நரகமும்
அனுபவித்தாகிவிட்டது 
மரணத்திற்க்குபின் ,
"உன்னிடம் பழகியதற்க்கு "
என்ன கிடைக்கும்?

ரகசியம்


என் ரகசியங்களை எட்டிப்பார்க்கும்
இறைவனுக்கு
உன் முகம் மட்டுமே
தெரியும்படியான வாழ்வை
இதோ, இங்கே
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

காய்ச்சல் நாள்

உடலுக்கு தேவையான
24 வகையான
அத்தியவசிய ஊட்டசத்துக்கள் பற்றி
தெரியாது அவளுக்கு
"இன்னும் ,ஒரே ஒரு வாய் சாப்பிடுப்பா"
டீயில் முக்கிய பன்னை
தந்துகொண்டேயிருப்பாள்

சொல்லாதது

பேசிய வார்த்தைகளில்
கோபமிருக்கலாம்
பேசாத மெளனத்தில் மொத்தம்
அன்புதானே!

சில மழை

கண்ணீர் துடைக்கும்
சில மழை

மாற்று

கண்ணீரின் தருணத்தில்
சிலநேரம்
ஒரு வெற்று புன்னகை!

மாறும் தேவைகள்





வேண்டுமென்பதில்
விஷமும்
வேண்டாமென்பதில்
அமுதமும் சேரும்
வாழ்வில் சில கணங்கள்.

காத்திருத்தல் ;தவம்
மகிழ்ச்சியோடு காத்திருத்தல்!

உண்மை

எது வேஷம்?
எல்லாம் வேஷம்
எது நடிப்பு ?
எல்லாம் நடிப்பு
எது உண்மை  ?
அதைவிடு ;
சொன்னால் விளங்காது.

கடைசி புன்னகை

எனக்கு தெரியும்,
ரகசியங்களற்ற மகிழ்ச்சி
போதையில்லா உறக்கம்
பனித்துளிபோன்ற நிர்வாணம்
கள்ளம் கபடமற்ற சிரிப்பு
இனி ,ஏதும் திரும்ப வரப்போவதில்லை
இப்போது விடைபெறும்
உன்னைப்போல.

நிலை

அழுக ஒரு காரணம்
சிரிக்க ஒரு காரணம்
அவரவர் அழுகை
அவரவர் சிரிப்பு
அவரவர் மனது
அவரவர் வாழ்க்கை.

நஷ்டம்

வருத்தமொன்றுமில்லை
எண்ணிக்கையில்
ஒன்று குறைந்திருக்கிறது
அவ்ளவே!


என்ன செய்ய ,அது உயிர்.

இதயம்

தோழி,கரையான் அரிக்கும்
ஈரமரத்துண்டு  

உன்மீதான காதலை மறைத்துவைத்திருக்கும்
என் இதயம்!

காத்திருத்தல்

இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்
தப்பில்லை.

மெளனம்

பேசாதே,
சில சப்தங்கள்
எனக்கு கேட்பதில்லை.
பேசக்கூடாது
சில சப்தங்கள் கேட்கும்வரை.

Tuesday 11 June 2013

பெருமழைகாலம் 8

வெளியே ,
கடுங்குளிர்
உள்ளே கதகதப்பு

பெருமழைகாலம் 10

கூச்சமும், வெட்கமும் பிடுங்கி தின்ன
புன்னகைத்து சிணுங்கையில் நீ
பேரழகி
இந்த பகல்பொழுதோ,
அதிஅற்புதம்.
நேற்றைய இரவைப்போலவே
இன்றைய இரவையும்
நீயே எடுத்துக்கொள்ளேன் அம்முகுட்டி!

பெருமழைகாலம் 9

தீ பற்றி எரிந்தது
அணைத்துக்கொண்டிருந்தோம் 

மூச்சும் தேகமும்
சூடாக இருந்தது .

பெருமழைகாலம் 7

முத்தமிட,
உருகுகிறாள்
நிரம்பி வழிகிறேன் நான்.

பெருமழைகாலம் 6

எதற்காக தனிதீவு?
அத்தை நகர்ந்ததும்
அடுப்படி ஓடிவந்து
பின்னாலிருந்து அணைத்து
செல்லக்கடி  கடித்து
வலக்கழுத்தில் முத்தம் பதித்து
வந்த சுவடே தெரியாமல்
கிள்ளி விட்டு ஓடிவிடும்
அந்த "திருட்டு பூனை"யுடன்
இந்த வீட்டில்
இப்படியே வாழ்ந்துவிட்டு போகிறேன்
எதற்காக தனிதீவு!

பெருமழைகாலம் 5

காமத்தின் பகல்வேளை
கண்கள் கைகளாகும்,

காமத்தின் இரவிலோ
கைகள் கண்களாகும்.

பெருமழைகாலம் 4

யுகம் யுகமாய்
நமக்காக நீண்டு கிடக்கும்
'ஆயிரத்தோரு இரவுகளில் '
மேடு மலை பள்ளங்கள் தாண்டி
புதையலை கண்டெடுத்த
ராஜகுமாரன் கதை
இன்றைய இரவில் உனக்கு சொல்வேன்
என்னுயிரே!

பெருமழைகாலம் 3

என்னவனே , மழையின்றி
காய்ந்து வெடித்து கிடக்கிறது 
விளைநிலம்
உன் கார்மேக உதடுகளால் முத்தமிட்டு 
எச்சிலால் ஈரப்படுத்து
விளைச்சல் பெருக்கு
முழுதாய் அறுவடை செய்
மூன்று போகம் .
உனக்காக நான்
எனக்காக நீ

பெருமழைகாலம் 2

காமத்தின் தனிமை தகிக்கும்
இந்த இரவில்
நம் படுக்கையறை ஜன்னலின்
திரைசீலை விலக்கி
எட்டிப்பார்த்தது காற்று .
நீயில்லை என்றதும்
வெப்பமாய் வெளியேறியது,
நீ இருந்திருந்தால்
வெட்கமாய் வெளியே சென்றிருக்கும்!

இந்த இடம் விற்பனைக்கு

இவன் அவனுக்கும்,
அவன் இன்னொருவனுக்கும்
பூமியை விற்றுக்கொண்டிருக்கிறான் .

எனக்கு சிரிப்புத்தான் வருகிறது
சிரித்தால் ,
'பைத்தியம்' என்பீர்கள்
ஹ ஹ ஹ!

நான்

வார்த்தைகள் குறைந்துவிட்டது,
நம்மிடையே .
சகித்துக்கொள்ளும் மெளனம்
நிரம்பிக்கிடக்கிறது .
உறுதியற்று தளர்கிறது
உடல் .
காலின் கீழ் நழுவுகிறது ,பூமி .
வெளியெங்கும் ,வெற்று புன்னகை .
காய்ந்து போன செடிகள் மட்டுமே
தென்பட்டுக்கொண்டிருந்த 
நிராகரிப்பின் சாலையில் 
சலிப்பும் விரக்தியும் சுட்டெரிக்கும் பாறை மேல்
பச்சை பசேலென "ஒரு கள்ளிச்செடி"
நான் உயிரோடிருக்கிறேன்!
மிக்க மகிழ்ச்சி.

தோல்வி

தகுதி சுற்றிலேயே
வெளியேறி விட்டவன் ,
வெற்றிக்கோப்பை பற்றி
பேசி என்ன?

பெருமழைகாலம்

முகத்தில் முத்தமிடும்
இந்த மழைச்சாரல் இனிமைதான்.

என் சில்மிஷங்களின்போது
கொஞ்சம் கோபப்படேன்,
குளிர்காய்கிறேன்.

அப்பாவி கடவுள்

இப்பொழுதெல்லாம்
'அற்புதங்கள்' செய்வதில்லை கடவுள்.
'அற்புதம்'செய்து செய்து
களைப்புற்ற கடவுள் !
வரிசையில் நின்ற பக்தர்களிடம்
கண்ணை திறந்து பார்க்க சொல்லி
பெருங்கோபம் கொண்டு
காட்டு கத்து கத்தினார்
பின் சில நேரம் ,
அழுதுகொண்டிருந்தார்.
கொஞ்ச நாட்கள் ,'சிரிப்போ சிரிப்பு' .
கடவுளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாம்
கல்லால் அடித்தனர் ,ஜனங்கள் .

பொழுதெல்லாம் அமைதியாகி விட்டார்
யார் ,என்ன கேட்டாலும்
பதிலாக ,வெறும் புன்னகை மட்டும்தான்.
கல்லடி பட்ட காயம் ,
'வலிக்குதா' என்று கேட்டேன்
அதற்கும் புன்னகை.

மீண்டு வருவேன்

நீ முன்னால் போ,
சிறிது சிறிதாய்
தேக்கி வைத்த
கோபத்தையும் காதலையும்
அழுது தீர்த்துவிட்டு 
வருகிறேன்,

மழைக்காதல்

"என்ன எப்பிருந்துடா லவ் பண்ண தொடங்குனெ?"

அன்று ,மாலை 4 மணி இருக்கலாம்
குடையை சுற்றிக்கொண்டு
மழையுடன் விளையாடி வந்தாய்,
உன் விளையாட்டில் தெறித்த ,ஒரு துளி
ஒதுங்கி நின்றிருந்த
என் கன்னத்தில்பட்டு  சிலிர்த்தேன்
இமைகளின் சிப்பிக்குள் விழுந்த நீ
முத்தானாய்
கன்னம் வருடிய துளி
முத்தமானது
இதுதான் ,மழையிடம் உன்னிடமும்
நான் ,காதல்கொண்ட கதை!

மொண்ணைக்கத்தி

மொண்ணை கத்தி ,
புண்ணில் பட்டால்
வலிக்காதா?

மழைச்சத்தம்

உன்னை தீண்டிய துளிகள்
சிரிப்பதும்
உன்னை தவறவிட்ட துளிகள்
அழுவதும்
மழைச்சத்தம் எனப்படும்.

பிடித்த மழையும் பிடிக்காத மழையும்

எனக்கு மழை  பிடிக்காது !





"எங்கியாவது ,
கொஞ்ச நேரம்  நின்னுட்டு  வந்திருக்கலாம்ல"

திட்டியபடியே
தலை துவட்டிவிடும் 
அவளை ரொம்ப பிடிக்கும்.
:-*

மழையளவு

அப்பாவ எவ்ளவுடா புடிக்கும் ? 

தன் பிஞ்சு கையை
அகல விரித்து
"இவ்ளோ" என்று சொல்லிவிட்டு
ஓடிவந்து முத்தமிட்டாள் .

"உனக்குடி?
புடிச்சிருந்த ஒரு முத்தங்குடு" .

ஆமா, இந்த மூஞ்சிய புடிச்சிட்டாலும்,
அது ஒண்ணுதான் கொறச்சலு"

அன்று இரவு ,நல்ல மழை!

மழை நின்ற பின் ஒரு சிகரெட்



இப்பொழுதெல்லாம்
மழையில் நனைவதில்லை
மழையை ரசிப்பதில்லை
மழைக்கவிதைகள்
முழுதாய் வாசிப்பதில்லை
வெறும் ,வேடிக்கை மட்டும்தான்
அமைதியாக அமர்ந்து
அப்படியே பார்த்துக்கொண்டிருப்பேன்
அதுதான் பிடிக்கிறது
மெதுவாய்
மெது மெதுவாய்
உள்ளங்காலிலிருந்து உச்சிக்கு ஏறும்
அந்த குளுமை
அது,
அதுதான்
மழைநேரத்தில்
தேவையாக இருக்கிறது,
கல்யாணமான புதிதில் ,இவள்
தேநீர் எடுத்து வந்தாள்
பறக்கும் அந்த ஆவியும்
அந்த கதகதப்பும் அன்றைய மழைநாளின்
உன்னுடைய மூச்சுக்காற்றை
நினைவுபடுத்தியதிலிருந்து
நான் இப்படிதான்!

மழை

யாரையேனும் பார்த்தால்
கொஞ்சம் சிரி ,
அடையாளம் தெரியாதெனினும்!

கெட்டகனவு

வாழ்வின்
மிக இனிமையான நாட்களை
"கெட்ட கனவாய் நினைத்து"
மறக்க சொல்கிறது
காலம்!
முடியுமா என்ன? 
நிராசையில் சாவது
நம் விதி!

"கடைசியா மொகம் பாக்குறவுங்க, பாத்துக்கோங்க" 
வருவாய்தானே, எனை பார்க்க?
அப்போதாவது வா.


****

மரணமென்பது ;உயிர் பிரிதல் 
நீ பிரிந்தபின் ,
உயிரே......... இது,
எரியூட்டப்பட காத்துக்கிடக்கும்
சடலம் .

தேர்வு

நான் எழுத
தேர்வொன்றை தயார் செய்கிறாய் ,
அன்பு
நம்பிக்கை
காதல்
சுதந்திரம் 
எத்தனை கேள்விகள் !
சில பதில்களை
செய்முறை விளக்கம் கேட்கிறாய் 
தேர்வுகளும் ,மதிப்பெண்களும்
பிடிக்காத நான்
அமைதியாய் விலகுகிறேன்
என்னுடைய பதில்களென
நீயே நிரப்புகிறாய் 
சரிபார்க்கிறாய்
மதிப்பெண் இடுகிறாய்
கூட்டிப்பார்த்து
தோற்று அழுகிறாய்
மீண்டும் அடுத்த தேர்வு
மீண்டும் எனக்குத்தான்.

பிரார்த்தனை


கண்கள் மூடினேன்
உன் முகம் 
நன்றியாய் புன்னகைத்தேன்  .

மியாவ்

நேசிக்கிறாய்
கொஞ்சுகிறாய்
முத்தமிடுகிறாய்

கால் சுற்றி
கடித்து
பிரண்டி 
விளையாடுகிறது  

பசிக்கையில்
உன்னிடமே அழுகிறது
உன் சூட்டில் உறங்குகிறது

ஹ்ம்ம்ம்ம்,
உன் வீட்டு பூனைக்குட்டியாய் 
பிறந்திருக்கலாம்!

மயிரு வாழ்க்கை

எதை குடித்தாலும்
மூத்திரம்
என்ன தின்றாலும் 
மலம்
எப்படி வாழ்ந்தாலும்
மரணம்!
போ மயிரு ,
இதுதான் வாழ்க்கை!

பகலில் செத்து
இரவில் பிழைக்கிறேன்

சுபம்

மனநிலை பிறழ்ந்தவனின்
பாடல் வரிகள்

பசித்திருப்பவனை அலைக்கழிக்கும்
அவமானம் 

தற்கொலை முடிவெடுத்த பின்
நண்பர்களுடன்  பேச்சு

சாந்தமாய்
ஒரு புன்னகை 


ஏதோ சொல்ல நினைத்து தோற்றுப்போகும்
இப்படியும் ஒரு கவிதை

எல்லாம் சுபம்!

இன்னொரு நான்

வெறிகொண்ட
ஊனமுற்ற மிருகமொன்று
உள்மனகுகையில் பொருமுகிறது
அகோரபசியில் அங்கும் இங்குமாய் அலைகிறது
அன்பு
கருணை 
மண்ணாங்கட்டி!
ஆறுதல் சொல்லியணைக்க
நெருங்க வேண்டாம்
அகப்பட்டால்
உயிரெடுக்கும் .
ஜாக்கிரதை!

குறுக்கு வழி


எதையோ தொலைத்தேன்

எதையோ தேடுகிறேன் 

"தொலைத்ததை"

மறந்து தொலைத்தால்

கொஞ்சம் நிம்மதி.

தோற்றவன்

தோல்வியை ஒப்புக்கொண்டவனை
ஏன் சித்ரவதை செய்கிறீர்கள்?

கைதி

உருவாக்கிய உலகில்
மாட்டிக்கொண்டேன்

நம் சாலை

"இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்" 
சொல்வேன்தான் .
இந்த சாலையை கடக்கும் சாக்கில்
என் கைகளை இறுக பற்றிக்கொண்டால்
வேண்டாமென்றா சொல்வேன்?
போடா லூசு.