Friday, 31 August 2012

மிச்சம்!

அம்மணமாய் பிறந்தான், கோவணத்தோடு செத்தான், கோவணம் பிடுங்க எத்தனை கைகள்!!!!

வழி மாற்றம்!

என்னலாமோ எழுத தோனுது ! எல்லாம் இங்கெ தான் வந்து விழும்! புடிச்சவங்க படிங்க, அவ்ளோ தான்!!! பிளாக் தலைப்பை மாற்ற எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல, இனி என் காதலும், என் எல்லா படிமங்களுக்கு மாக இந்த பிளாக் எழுத ப்போறேன்!!!

Tuesday, 28 August 2012

அந்த பேரமைதியில்
ஒரு விதை வெடித்த
"பெரும் சப்தம்"
எனக்கு கேட்டது,
எழுந்து விட்டேன்!

"மாற்றங்களொன்றே"

என் கவிதைகளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அல்லது,
யாருடையதோ கவிதையை
நான் எழுதுகிறேன்!
என் வீட்டு சுவற்றில்
பல்லியொன்று பூச்சி பிடிக்கும்,
கண்ணன் கீதை சொல்வான்,
அர்ச்சுனன் கரம் கூப்பி தலையசைப்பான்,
நான் "சும்மா" கட்டிலில் படுத்து
வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன்!

நீ ,எனக்கு
இறை;
நான் , உனக்கு
இரை!

Friday, 24 August 2012

அதோ,
அந்த திருப்பத்திற்கப்பால்
எதும் தென்படுவதில்லை,
வா , கண்ணுகெட்டும் தூரம் வரை
கை கோர்த்து நடக்கலாம்!!!


Tuesday, 21 August 2012

கன்னம் கிள்ளி,
தொப்பையில் குத்தி,
முதுகில் அறைந்து,
காதை திருகி,
வெட்கத்தில் சிவந்து,
பொய் கோபமாய் முறைக்கிறாள்,
தோள் சாய்ந்து
சிரிக்கிறாள்!!! "நண்டூறுது,நரியூறுது"
அவ்வளவு நல்ல விளையாட்டு! :)Tuesday, 14 August 2012

"என் முதல் குழந்தை, நீ தான்!" 
தலை கோதி ,
பொய் பேசுகிறாய்; போடி,
நான் ,அடம்பிடித்து கேட்டாலும்
நீ தருவதேயில்லை;
கன்னம் எனும் சோன் பப்டி!


Thursday, 9 August 2012

உடையுதிர் காலம்


அணைக்கும் போது,
எலும்புகள் நொறுங்க வைக்கிறான்………………………
பெரிய,,,இவன்!!!! 
உன்னை அசையாமல் கட்டிப்போட
என்னிடமும் அரைஞாண் உள்ளது,போடா!!!!


Friday, 3 August 2012

(கணேசனின் மரணம். சிறு குறிப்பு பாகம் 3)  இப்படி எந்த குறிப்பும் எழுதாமல் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திரு.கணேசமூர்த்தி அவர்கள் இயற்க்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்!!!   " சிரிச்சிட்டே செத்திருக்கான், நல்ல சாவுடா"# சதீஸ் . "அவன் நல்லவன் டா" # ராமு. " நல்லவனா இருந்தா இப்பிடித்தான், சாவ வேண்டிய வயசாண்ணா இது???? கட்டிங் ஊத்துங்கோ"# பார்த்திபன், டா ஒரு பீடி உண்டா???" # சசி

கணேசனின் மரணம் ஒரு சிறு குறிப்பு ,பகுதி 2) நண்பர்களே,உங்கள் மீது படும் வெயில் என் நட்பு! எனக்காகவும் ஒரு கோப்பை ஊற்றுங்கள்,நம் நட்பை பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள்! என்னவளே, மேலும் உன்னை உருகி நேசித்திருக்கலாம், இதோ உனக்காக என் கடைசி முத்தம், என் முதல் முத்தத்தை விட தூய்மையானது, இந்த உடல் புதைந்த இடத்தில் உன் காலடித்தடம் பதித்து போ! என்னை (நான்) எதிரியாய் பாவித்தோரே, உங்கள் கால் நனைக்கும் மழை என் தீண்டல்கள்! என் தவறுகளுக்கும், உங்கள் அறியாமைக்குமாக சேர்த்து என்னை மன்னித்துவிடுங்கள்!  மனிதர்களே, உங்கள் பிள்ளைகளிடம் என்னைப்பற்றி கூறுங்கள்! அவர்களுக்கு பட்டாம்பூச்சியும், பல்லியும் உறவுகள் என்று கற்றுகொடுங்கள்! மீதமாய் தொக்கி நிற்க்கும் என் கவிதையை வாழ நான் மீண்டும் வருவேன்!!!! ஓம் சாந்தி ,சாந்தி,சாந்தீ…………………
###
இப்படி எந்த குறிப்பும் எழுதாமல் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திரு.கணேசமூர்த்தி அவர்கள் இயற்க்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்!!!

(கணேசனின் மரணம் ,ஒரு சிறு குறிப்பு. பகுதி 1)      புத்தி பிறழ்தவண் வீணை கம்பிகள் போல நரம்புகள் விம்மி துடிக்கிறது. கார்மேகத்துள் நுழயும் நிலாபோல் கருவிழி மேலேறி இமை மூட ஆயத்தமாகிறது. காற்றோடு கலந்துவரும் ரயிலோசை போல் துடிப்பு ஏறி,ஏறி இறங்குகிறது. தவளையை விழுங்கும் பாம்பின் லவகத்துடன் மரணம் என்னை விழுங்குகிரது. பிரிவின்போது நீ தந்த முத்தங்கள் , இதோ கண்ணீராய் வழிகிறது. வார்த்தைகள் விளக்காத உன் அணைப்பின் கதகதப்பை போல் ஏதொ ஒரு கவிதை என்னுள் தொக்கி நிற்கிறது!!! ஆணவமும்,கோபமும்,வெறுப்பும் அதனதன் அர்த்தம் இழக்கிறது. வாழ்க்கை ஒரு காதலியை போல தன் காதலன் மரணன் வருகையில் மிக அழகாகி விடுகிறாள். நிறை,குறை நிறைந்தவன் மனிதன்.நிறைகளில் நான் திருப்தி படவில்லை, குறைகளில் குறைவைக்காமல் வேதனைப்பட்டேன், என் அன்பே,மரணமே,நீ இல்லையேல் நான் முழுமையற்றவன்.