Tuesday, 30 June 2015

கொஞ்சம் பூக்களுடன்

உனக்கான காத்திருப்பில் -
உனக்கான காத்திருப்பில்
பல நூறு வருடம் மழையும் வெயிலுமேற்று நிற்கும்
ஒரு ஆலமரமாகிறேன்

உன்னோடிருக்கும் கணத்தில்
உள்ளுள் ஒரு நதியின் பயணம் உணர்கிறேன்
நாம் பிரிந்து செல்லும் நிமிடங்களில்
பட்டம் துரத்தி செல்லும் ஒரு சிறுவனாகி
வினாடிகளை பிடிக்க முயல்கிறேன்

நீ வேடிக்கை பார்த்து சிரித்து ரசிக்கிறாய், கோணவாச்சீ

நான்

ஒரு பூச்செடி
ஒரு பழ மரம்
உபயோகப்படலாம் உங்களுக்கு
ஆனால்
பூக்களில்லாத
பழங்களில்லாத
முள் செடிக்குமானது 
இந்த உலகம்
விலகி நடக்க பழகலாம் நீங்கள்
அல்லது வெட்டி விடலாம்
ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள்
உங்கள் குணம் போல

மீண்டும் துளிர்க்கையிலும்
முள்ளே வரும்
அதன் குணம் மாறுவதில்லை!

கொலுசிடும் சாக்கில்
உன் கால்களில்
விரல்  தீண்டுகிறேன்  நான்

பெருங்காதல் பொங்கும் பார்வையால்
கண்களால் எனை நனைக்கிறாய்  நீ

"சலக்க்"கென சிரித்து
பொது இடமென நினைவுபடுத்துகிறது 
கொலுசின் முத்துமணி

வெட்கப்பூ

பட்டுசேலையுடுத்தி
மங்கல தாலமேந்தி
திருவிளக்கொளியில் முகம் ஜொலிக்க
நீ வெட்கத்தில் தலைகுனிந்து
வலம்வைத்து வணங்கும்
மணக்கோல வர்ணங்கள் நினைவில் வரும்
மலர்ந்து மண்பார்க்கும் மலரொன்றை காண்கையிலே

இதிஹாசம்

நான் பீமன்
நீ அட்சய பாத்திரம்.

திருவிழா கூட்டத்தில்
தொலைவிலிருந்து
சாமியை தொழும்
ஒரு பக்தனாகிறேன்
சாமியை பார்க்க முடிவதில்லையெனினும்
சாமி அங்கிருப்பதே போதுமானதாகி விடுகிறது  பக்திக்கு
உன்னை பார்க்காவிடினும்
நீ வரும் திசை பார்த்து
காதலிக்கிறேன்.

நான்கு சென்ட் வானமும் நாலைந்து நட்சத்திரமும்

உன் வருகைக்கு காத்திருக்கிறேன் நான்
நீ வர காத்திருக்கிறது
கனகாம்பரம்
செம்பருத்தி
நந்தியார்வட்டம்
அரளி
நம் சிறு வீடு
மாமரம்
நான்கு சென்ட் வானம்
அதில் நாலைந்து நட்சத்திரம்

யாருமற்ற தொலைவில்

காட்டருவியின் சாரல் பட்டு
காற்றிலாடும்
சிறு பூச்செடியாய்
என்னை உணர்கிறேன்
நாம் முத்தமிட்டு வெட்கப்பட்டு
ஒன்றாய் சிரித்து மகிழ்ந்த
அந்த சாலையோரம்!

ஒரு நாளென்பது

ஒரு நாள்தானே, ஒரு 24 மணி நேரம் என்ன பாக்காம இருக்க முடியாதா? என்று விட்டு போனாயே,

உனக்கு தெரியுமா?
என் உலகத்தில் அன்று மட்டும் 7400 பூகம்பம் வந்தது

அன்று காலை பிறந்து  எனக்கு நண்பனான ஒரு தும்பி
வயதாகி ஆயுள் முடித்து மெலிந்து உயிர் நீத்தான்

உன் நினைவை சுமந்தபடி
168,000,000 மைல்கள்
வெறுமையில் அலைந்து திரிந்தது என் ரத்தம்

உன்னை நினைத்து லட்சம் முறை துடிதுடித்த
என் இதயத்தின் வலி
உனக்கு புரியாது

ஒரு நாள் தானே என்கிறாய். போடி.

பொய்யன்

"எப்பாவது என்ட்ட பொய் சொல்லிருக்கியா?" என்று கேட்டாயே,
"ம்", உன்னை பார்க்காமல்
உன்னோடு பேசாமல்
என்னால் இருக்க முடியும் என்றேனே…………
பொய் தான்.
உன் மேல் காதலில்லை என்பதும்
நீ அழகாயில்லை என்பதும்
உன்னை முத்தமிட எண்ணமில்லை என்பதும்
எல்லாமே பெரும் பொய்.

Wednesday, 3 June 2015

சிறு தெய்வம்

மிட்டாய்களும் பொம்மைகளும்
கேட்டு பிரார்த்திக்க
கெஞ்ச
கோபிக்க
உரிமையோடு சண்டையிட
எல்லா குழந்தைக்கும் இருக்கும்
ஒரு "சாமி" போல
தீரா முத்தங்கள் கொட்டி தர
எனக்கே எனக்காய் வந்த "சாமி" நீ.