Friday 3 January 2014

தன்னைத் தானே செதுக்கிக்கொண்டிருக்கும்
அந்த சிற்பம் 
அவள் நகம் வெட்டி கொண்டிருந்த அழகை பார்த்த
யாரோ வடித்தது.

நாளொன்றுக்கு என்னை
ஒரு முறை பார்த்தால் போதும்
குளத்தில் விழுந்த முதல் மழைத்துளியின் வட்டம் போல.


அய்யோ, பெருமழைகாரா

உன்னை பார்க்கும் அவகாசம்கூட எனக்கு தராது
அப்படி ,என்னையே பார்த்துக்கொண்டிருக்காதே

"பார்க்காதே "என்று நான் சொல்வதால்

பார்க்காமலுமிருக்காதே

நீ பார்ப்பதும் ஒரு சுகம்
உன்னை பார்ப்பதும் ஒரு சுகம்
"பார்க்கமாட்டானா" என்று ஏங்கி தவிப்பதும்
ஒரு சுகம் .

நீ கடந்து செல்கையில்
மூச்சுத்திணறுது தோழி
அந்த சுருள்முடி கற்றைக்குள் புகுந்து
குட்டி குட்டி சூறாவளியாய் உருமாறி பாய்ந்து 
என்னை தாக்கும் ,உன் காற்று தோழியிடம்
இரண்டு நல்ல வார்த்தை சொல்லடி.

வார்த்தைகளெல்லாம்
ஒரு குழந்தையாகி
உறங்கிக்கொண்டிருந்த கணத்தில்
அவள் மடி சாய்ந்திருந்தேன்
தொட்டிலாட்டியபடியே தூங்கும் தாய் போல
என் தலை கோதிக்கொடிருந்தன
அவள் கைகள்




விழுந்து
எழுந்து
விழுந்து
நடை பழகும் குழந்தை

விழுதலும் எழுதலும் திரும்ப விழுதலும்
சலிப்பதேயில்லை பிள்ளைக்கு
நடப்பது ,மிக சுவாரசியம்
பெரும் லக்ஷ்யம்
இல்லையெனில்
பெரும் பயணத்தின் முதல் தொடக்கம்
எல்லோரும் அன்பின் பிள்ளைகள்
நடை பழகியபடியே இருக்கிறோம்
வாழ்நாள் முழுதும்
காதலின் உலகில்!