Tuesday, 22 October 2013

புதிர்

கண்கள் மூடி பால் குடிப்பது
ஞானமா? சுயநலமா?

அநேகம்
நீ தின்பண்டம்
நான் ஒரு கோடி எறும்பு

காதல் இனிப்பு.

நான் தேனி
நீ ஒரு கோடி பூ

காதல் ஒரு துளி தேன்.

நாய்களும் பூனைகளும்

நாய்களுக்கு பாசமுண்டு
நாய்களுக்கு நன்றியுண்டு
அவை வாலாட்டும்
முரண்டு பிடிக்கும் .
நாய்களை போல் அல்ல பூனைகள் ,
அவை தன் ரகசியம் காப்பவை.
அவற்றுக்கு வெறி பிடிப்பதுமில்லை.

சிவசக்திஆதியில் குடித்த ஆலகால விஷம்
இன்னும் இறங்கவில்லை
கழுத்தை ,நெரித்து பிடிக்கிறாள் பார்வதி
வாழ்வும் சாவுமின்றி
பேயாய் அலையும்
சிவன்கள்.

பறவை

"சுதந்திரமாய் இரு" என்கிறாய்
இறுக்கமான என் மூச்சுக்காற்றை
இயல்பாக்குகிறாய்
ஆடுவதை , பாடுவதை ஏற்றுக்கொள்கிறாய் .
நன்றி நண்பனே !
தொடர்ந்து வரும்
உன் பார்வைகளின் கீழ் ,நான்
சுதந்திரமானவளா , என்ன?

நான்

பொய்யும், பெரும்பொய்யும்,
உண்மையும் பேருண்மையும் .
இருப்பது
ஏதேனும் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்
நான் யார் ?

வலியின் ரகசியம்

என்னை ,மன்னித்து விட்டு விடேன். 
.
.
.
.
.
.
பதில் சொல்ல முடியாத
கேள்விகள் கேட்காதே.

தனிமையின் நிழல்

ஒவ்வொரு பகல் பொழுதிலும்
இரவுக்காக காத்திருக்கிறேன்
இரவுகளிளோ,
என் நாட்கள் விடியாமல் முடிந்துவிட
எதிர்பார்க்கிறேன்.
பகல்களிலும் இரவுகளிலும் அல்லாடுகிறது
ஒரு நிழல்!

புன்னகை

ஜெயித்தவை அனைத்தும் சலிப்பு
தோற்றவை அனைத்தும் ஆணவம்
பேரசை கொள்ளும் 
உன் புன்னகை
வாய்க்கவில்லையே புத்தனே
இதோ, இங்கே ஒரு பிறப்பு.

உறவின் பாதை

காமம் மிகுதியான இரவுகளில்
உன்னை நினைக்கிரேனே
இதுபோல் ,
சலிப்பானா நாட்களில்
என்னை நினைப்பாயோ?
என்னை நினைக்கும் நாட்கள்
சலிப்பாகுமோ?

சுயம்

கொஞ்சம் கோபம்
கொஞ்சம் சண்டை
நிறைய நேசம்
ஆறுதல்படுத்த நான்
நேசித்து அணைக்க நீ 
சுயநலமாகவே இருக்கட்டும் ,வாழ்வு !
அதுதான் அழகு
என் சுயம் நீ!

இப்போதைக்கு


நண்பர்களிடத்தில் அரட்டை
காதலியுடன் கலவி
ஏதோ சில கடமைகள்
ஏதோ ஒரு பெயர்
ஏதோ ஒரு அடையளம்
எல்லாம் வெறும் பாசாங்கு .
பயணச்சீட்டில்லா பயணியாக நான்.
பரிசோதகருக்கான பயமிருப்பினும்,
முகத்தில் ஒரு புன்னகை.

எல்லாம் இருந்தும் ,

எதோ ஒன்றில்லை

நீயில்லை.

மழை இரவுகள்

உனக்கான குறுஞ்செய்தியை தட்டச்சி க்கொண்டிருக்கையில்
என் கைபேசி
ஒரு பியானோவாய் மாறி விடுகிறது பெண்ணே
கறுப்பும் வெள்ளையுமான உணர்ச்சிகளின் விசைகளிருந்து
உனக்கான ஒரு கவிதையும்
என் முகத்தில் ஒரு புன்னகையும் உருவாகிறது
மனதோடு நெருக்கமாய்
சிரிக்கும் உன் பூ முகம் என் நெஞ்சம் நிறைக்கிறது
என்னை நிரப்பி வழிந்தோடும் இசையென
காற்றோடு கலக்கிறது மூச்சு.

*****-

மழை இரவில் மின்னலொளியில்
தூரத்தில் தென்பட்ட குளத்தின் காட்சியென
சட்டென கடக்கும்
பிரியும் பொழுதின்
உன் கண்ணீர் முகம்

******

மழை
கடவுளின் உளவாளி 
நம் ரகசியங்களை ஒற்றறிவது பணி.

*****

ஒன்றோடொன்று பின்னி புணர்ந்து
உன்னையும் என்னையும் நினைவுபடுத்திய
அந்த ஆலம்வேர்
இந்நேரம் முழுக்க நனைந்திருக்கும் .

****

மழை ஓய்ந்த நிசப்தம் போல
நீ  உறங்குறாய்
ஊடல் கொண்ட
உன் கோபங்களை சொன்னபடி
இன்னும் சொட்டிக்கொண்டிருக்கிறது
வெளியே மழை.

******

உன் கதகதப்பில்
நானிருக்கும் இந்த மழை
யுகம் தீரும் வரை பெய்ய ஏங்கி கிடக்கிறேன்
அல்லது
உயிர் தீரும் வரையாவது  .