Tuesday 22 October 2013

மழை இரவுகள்

உனக்கான குறுஞ்செய்தியை தட்டச்சி க்கொண்டிருக்கையில்
என் கைபேசி
ஒரு பியானோவாய் மாறி விடுகிறது பெண்ணே
கறுப்பும் வெள்ளையுமான உணர்ச்சிகளின் விசைகளிருந்து
உனக்கான ஒரு கவிதையும்
என் முகத்தில் ஒரு புன்னகையும் உருவாகிறது
மனதோடு நெருக்கமாய்
சிரிக்கும் உன் பூ முகம் என் நெஞ்சம் நிறைக்கிறது
என்னை நிரப்பி வழிந்தோடும் இசையென
காற்றோடு கலக்கிறது மூச்சு.

*****-

மழை இரவில் மின்னலொளியில்
தூரத்தில் தென்பட்ட குளத்தின் காட்சியென
சட்டென கடக்கும்
பிரியும் பொழுதின்
உன் கண்ணீர் முகம்

******

மழை
கடவுளின் உளவாளி 
நம் ரகசியங்களை ஒற்றறிவது பணி.

*****

ஒன்றோடொன்று பின்னி புணர்ந்து
உன்னையும் என்னையும் நினைவுபடுத்திய
அந்த ஆலம்வேர்
இந்நேரம் முழுக்க நனைந்திருக்கும் .

****

மழை ஓய்ந்த நிசப்தம் போல
நீ  உறங்குறாய்
ஊடல் கொண்ட
உன் கோபங்களை சொன்னபடி
இன்னும் சொட்டிக்கொண்டிருக்கிறது
வெளியே மழை.

******

உன் கதகதப்பில்
நானிருக்கும் இந்த மழை
யுகம் தீரும் வரை பெய்ய ஏங்கி கிடக்கிறேன்
அல்லது
உயிர் தீரும் வரையாவது  .

No comments:

Post a Comment