Wednesday 28 November 2012

மாலகோவில்

மஞ்செ அரைக்கும் புள்ளே,
மனசுக்குள்ளே நெறஞ்ச புள்ளே ,
புதுசா சமஞ்ச புள்ளே,
பூக்கோலம் போட்ட புள்ளே,
மைக்கண்ணால் சேதி சொல்லு
மாமன் உன்ன தூக்கிபோறேன்!
மாலகோவில் நோம்பிக்கு ,நான்
மை,வளையல்
வாங்கித்தாறேன்

****

போர்வைக்குள் புகுந்து விட்ட
பூரான போல,
நெஞ்சுக்குள் நெளியுதடா
உன் நெனப்பு!
வார்த்தையெல்லாம்
கொடுக்குத்தேளு,
பாக்கும் பார்வை
செங்குளவி,
ஆச, வெஷம் தலைக்கு ஏற,
தள்ளாடி தவிக்கிரேன் நானு ,
தாங்கி புடிக்க யாருமில்ல!
நீ ,கண்டாஙி சேல தர
காலமெல்லாம் காத்திருப்பேன்!
பாதையெல்லம் பாத்திருபேன்!


*மழையும் , வெயிலும்*

நின்று எரிந்த சடலங்களாய்
கருகி செத்த பூச்செடிகள்.
உடைந்த செங்கல்லும்,
ஒற்றை செருப்பும் ,
ஜல்லி கற்களும்
உள்ளே சிதறிய
தண்ணீர்த்தொட்டி.
முற்றம் முழுதும்  கலைந்து கிடக்கும்
மழையில் ஓடிவந்த
காலடித்தடங்கள்.
உடைத்து நொறுங்கிய
பீர் பாட்டில்.
உபயோகித்து வீசிய
ஆணுறை பாக்கெட்.
தூரத்து
பாழ்மரப்பொந்தில்
குஞ்சு தத்தை
"கீச்சொலி"யெழுப்ப குழந்தையின் அழுகையும்,
அம்மாவின் கொஞ்சலும் ,
அப்பாவின் அதட்டலும்
காற்றில் தேடி ,
தன்னகத்து தனிமையில்
மரணித்துக்கொண்டிருக்கும்
ஊருக்கு வெளியே ,
ஓடுகள் உடைந்த
ஒற்றை வீடு!


Tuesday 27 November 2012

சில ,பல கேள்விகளில்
முடிந்து விடுகிறது
அடிபட்டு கிடக்கும்
வாழ்க்கை!

கம்பளிக்குள்
நீயில்லாத இரவில்
எதற்கு பெய்கிறதிங்கே ?
இந்த பேய்மழை.

****

பூச்செடியின் கீழ்
உதிர்ந்து கிடக்கிறது,
நேற்றைய மழைஇரவு

****

அடுப்பூதும் தாயாய்
மூச்சு திணறி சமைகிறேன்
உனக்கான , கவிதையை!
அருகில் ,நீயில்லாதா
கவிதையை!


Sunday 25 November 2012

தீராப்பெருங்கதை


என் விடுமுறை நாட்களில் மட்டும்,
துண்டை மறந்து,
குளிக்க செல்லும்
மறதிக்காரி!

***

"கொஞ்சம் இங்க வாங்க"
உள்ளாடைக்கு கொக்கி போட
உத்தரவிட்ட மகாராணி ,
முதுகில் கை பட்டால்
முறைப்பாள்!

*** 

ஒப்பனை முடித்து கிளம்பையில் ,
பின்னாலிருந்து அணைத்தால்,
என் பெயர் சொல்லி கத்துவாள்,
பேரழகி பிசாசு!

***

என் அத்தை மகள்களை பற்றி
இன்னும் ,எத்தனை கதை

வைத்திருக்கிறாளோ?
புரளியை கிளப்பும்
பொல்லாதவள்!

***

என்னோடு பேச வரும்
பெண்களையெல்லாம்
தன் புடவை பற்றி பேச வைக்கும்
கெட்டிக்காரி!

***

சிரித்தபடி எச்சரிப்பாள்,
"அங்க ஆம்பிளைங்க பக்கம் இருங்க,
வந்துர்ரேன்"!

***

"டேய்"என்பதும் "புருசங்காரா" என்பதும் ,
குறிப்பறிவித்தல்!
"கருமீ" சொல்கயில் மட்டும்
கள்ளசிரிப்பாய்
கடக்கும்,
திருடி!

***

வரும் வழியெங்கும் ,
அமைதியின் வடிவாய் இருப்பாள்,
இன்னும், இரண்டு நாட்கள்,
சிரித்து,
அழுது,
ஆர்ப்பாட்டம் செய்து
பேசி,பேசி
கொல்லபோகும்
பொண்டாட்டிக்காரி!

***

மனைவியுடன் சேர்ந்து போகும்
கல்யாண கதைகள்,
மகாபாரத கதைகள் விட,
நீண்டு போகும்!


ஏற்பு

காத்திருக்கிரேன்,
முதலில் வருவது,
நீயாக  இருந்தால்,
நலம்!
இல்லையா;
மிக்க நலம்!

நழுவுதல்


கட்டடத்திலிருந்து விழுவதாய்
கனவு கண்டேன் !
தரையா,
விழிப்பா,
இருட்டா,
நடுக்கமா?
எது நீ?

கைப்பேசி சிறுவன்

தீப்பெட்டிக்குள் ,வெட்டுக்கிளி!
தவிட்டு பானைக்குள் ,
பொன்வண்டு!
அட்டைப்பெட்டிக்குள் ,
சிட்டுகுருவி வளர்த்த
சிறுவன் நான், 
இன்று; கைப்பேசிக்குள் ,
காதல் வளர்க்கிறேன்!
என்ன தவறு???


எல்லா வாசல்களும்
அடைந்தாகி விட்டது!
உன்னை, நேசிப்பதை தவிற
வேறு வழியேயில்லை!

எதிர்கடக்கும் பேருந்துகளின் ,
இரு குழந்தைகள் போல,
பக்கவாட்டில் தலைசாய்த்து,
புன்னகை தெறிக்க,
கையசைத்து, கடக்கும் நிலை,
உனக்கு வாய்த்தது,எப்ப்படியோ!
நெடுமூச்சொன்றை
உதிர்த்துவிட்டு,
கண்கள் மூடி மெளனமாகிறேன்!
விமானம் பார்த்து,
பின்னால் ஓடும்
சிறுவன் போல,
உன் நினைவுகளை
துரத்தியபடி!


"hi, good morning, have a nice day"


ஆறுமணி சூரியன் வர,
அஞ்சு மணியிலிருந்து ,
உறங்கி வழிந்து காத்திருக்கும்
சேவக்கோழி!
உன் , இனிய நாள்
குறுஞ்செய்தி வந்ததும்
"கொக்கரக்கோ"!


*தாமரை குளம்*

சேம்பின் இலைகள் , விரிந்து நிற்க,
அல்லிக்கொடிகள் ,படர்ந்து கிடக்க,
தாமரைப்பூ
பூத்து நிறையும்……… இலைகள் மேய்ந்த பாழ்குளம்!
அல்லி கூம்ப., பகலவன் ரசிக்க
தாமரை விரியும்,
தாமரை கூம்ப, அல்லி விரிய
வெண்ணிலா ரசிக்கும்!
பகலும் , இரவும் மாறி,மாறி கடக்கும்!
கரையோரம் ரசித்துவிட்டு,
கால்கூட கழுகாமல்
கடந்து போக,
தேங்கி கிடக்கும்
அழுக்குத்தண்ணீர்!
குளத்தின் மெளனம்,
வலியோ? காத்திருப்போ?
மழையறியும் ரகசியங்கள்!
நீ இறங்க பயக்கும்
காதல் சகதியில்
கவிதை பூத்த ,
பாழ்குளம் நான்! என் அன்பு,
அது,வெறும் அழுக்கு தண்ணீர்!


சிறுமி

சிறுமியாகிறேன், நான்!
நீயனுப்பிய ,
பழைய,
குறுஞ்செய்திகளை,
மெளனமாய்,
பார்த்துக்கொண்டிருக்கையில்,
தூரத்து "பீப்பி" சப்தம்
கேட்டு தேம்பும்,
ஐஸ்வண்டிக்காரனை
தவறவிட்ட சிறுமி! 


Wednesday 14 November 2012

ஒரு காதலும் , ஒரு சில கவிதைகளும்

கரிகாலனின்
வாள் வீச்சில் ,
ஆயிரம் யானைகள்..........
மிரண்டு போய்
சிதறியோடும்,
புழுதி பறக்க………
நிலம் அதிர………
பிளிறி வீழும்!
****
வேட்டையில் தப்பிய
திமிங்கலம்,
ஈட்டியின் ரணத்தில்
இறந்து  ஒதுங்கும்! 
****
அட்டைபூச்சி நீந்திய
வெள்ளைக்கோட்டு
பாதையாய்
காலம் நகரும்!
****
புல்லின்  நுணியில் ,
பனித்துளி பழம்
உதிர்ந்து விழ ,
இலை நிமிரும்   ! 

****
நீ பார்க்க புன்னகைக்கும்,
நீ நட்ட
செம்பருத்தி!
****
  நீ கொஞ்சாத,
தெருநாயொன்று
வாலசைத்து
மோப்பமிடும்!

****

உயிர்ப்பிக்கும் காதல்…………
முதலில் கொல்லும்!

Sunday 11 November 2012

கலைகாரி

"தப்,தப்" தாளமிட்டு ,
ராகமாய்……
அலாசி,பிழிந்து
மாபெரும் கலைதொழிலாய்
நீ,துணி துவைக்க,
நம் வீட்டு கொடியெல்லாம்
பூத்து குலுங்கும்!

*சில்லறை வண்டி*

"ண்ணா,ண்ணா, காசுண்ணா"
"சாப்புடவே இல்லண்ணா"!
சட்டை நுனியை பிடித்திழுக்கும்
செம்பட்டை தலை
சிறுவனையும்,
அவன் அழுக்கு சட்டையை
பற்றியபடி நிற்கும்
ஊளமூக்கி சிறுமியையும்
பார்த்துக்கொண்டே
சட்டைபையில் கைய்யிட்டேன்,
சில்லரை காசேதும் சிக்கவில்லை
"சில்லற இல்லப்பா என்றபடி ,
தேநீர் அருந்தியது போக
மீதம் சில்லறைக்கு
கடைக்காரன் திணித்த
மிட்டாய்கள் நீட்டினேன்!
"ஆய்,மிட்டாயீ"
தங்கைக்கொன்றை கொடுத்துவிட்டு
சினேகமாய் புன்னகைத்து கடந்தான்! 
மென் சிரிப்போடு போய்
இருக்கையில் அமர்ந்தேன் ,
நடத்துனர் குரல்
தெளிவாக கேட்டது!
"எல்லாரும் சில்லர எடுத்து வச்சிக்குங்க,
இல்லாதவுங்க 
அடுத்த வண்டீல வாங்க"!


Wednesday 7 November 2012

*நட்சத்திர காடு*


தனிமை இரவில்
மொட்டை பாறை நிறைக்கும்
சில்வண்டின்
ரீங்காரம் !
நம் நீண்ட தூர
இடைவெளியை
பெருமூச்சு நிரப்பும்,
மெளனமாய்
ஒரு கவிதை
உடைந்து சிதறும்!
கார்மேகம் கடக்க
நிலவொளி
மழை பொழியும்!
தவளை பாடும்!
நானும் பாடுவேன்!
ஒற்றை பனை மரத்தில்
பிய்ந்து தொங்கும் பனையோலை
காற்றில் ஆடும்
"சர,சர,சர"!
கள்ளிப்பூ
பூக்கும் காலம்
வந்தபாடில்லை!
ஒற்றை பனைக்கு ;
நிலா  துணை  .......
எனக்கு ,வானம்!


மிதக்கும் நகரம்

பாசி படர்ந்த
பழுப்பு சுவரில்
கரித்துண்டு கிறுக்கலில்,
நிர்வாண பெண்ணின்
கோட்டோவியம்!
ஏதோ ஒரு பிக்காசோ!
பெண்குறி பற்றிய,
பின் நவீனத்துவ
கவிதையொன்று
காணக்கிடைக்கும்,
ஏதோ ஒரு பாப்லோ நெருதா!
"தண்ணீ தொட்டீ தேடீ வந்த" கேட்கும்,
யேசுதாஸ்,tms ன்
ஏதோ மி(எ)ச்சங்கள்! 
மொக்கு சந்தில்
கஸ்டமருக்கு
காத்திருக்கும் சரசக்கா!
ரம்பை,ஊர்வசி,மேனகை வரிசை போலும்! 
tasmac ஒரு போதிமரம்,
tasmac ஒரு கலைக்கூடம்!
ஓவியன்,
கவிஞன்,
பாடகன்,
பேச்சாளன்………………!
"கலை!……………
அள்ளியள்ளி பருக வேண்டிய ,
அமிர்தமடா அது!"
கன்னம் வழிந்த
வாந்தியை
நாயொன்று மோப்பமிட,
மூத்திர சந்தில் 
மூச்சற்று கிடக்கும்
கிழவனுக்கு ,
வாய்த்ததெந்த
ஞானநிலை?


*நீயெல்லாம் நல்லா வருவடி! :) *

கொடுத்து....... கொடுத்து,
வறுமையில் வாடும்
வள்ளல் நான்!
கையேந்தி  நிற்க்கிறேன்
யாசகன் போல!
"எச்சை கையில்
காக்காய் ஓட்டாத,
கஞ்சப்பிசிநாரி "!
ஒரு முத்தம்
கேட்டதற்க்கு
ஓராயிரம்
கதை சொல்கிறாள்!

*தாவரவியல்*


பூக்கும்
தாவரங்கள்
இரண்டு லட்சத்து
ஐம்பதாயிரம்.
முத்தமிட நெருங்கையில் ,
இதழ்கள் விரிக்கும்
பூங்கொடி, 
கண்கள் ,மூடும் .....
"தொட்டால் வாடி" ! 
தாவரங்களில்
பெண்
அரியவகை!


Saturday 3 November 2012

கொஞ்சம் ,கொஞ்சமாய்
இழந்து கொண்டிருக்கிறேன்!
உன்னையா, என்னையா,
தெரியவில்லை!

*சர்வ லட்ச்சணங்களும் பொருந்திய சாமுத்ரிகா பட்டு*

வாசலில்
நீர் தெளித்த
தடம் போல,
நீ கோபத்தில் தெளித்த
வார்த்தைகள் சிதறிக்கிடக்கும்!
உன் தோழிகளுக்கான
பகட்டுக்களில்,
நாம் இழந்த கணங்கள், 
உனக்கு தேவையான பொருட்களை விட
விலை அதிகம்! 
என் கோபம் உணரவில்லை, 
உன் கன்னத்தில்
கை பதித்த வன்மம்., 
நீயும் உணர்ந்தபாடில்லை,
என் வியர்வையின்
போராட்டங்களை!
நீ விட்டுச்சென்ற தனிமை
வீடு நிறைக்கும்,
உன் கொலுசொலியும்
சிரிப்பையும் போல,
ஒரு மென் சோகம்
இதயம் குடையும்
ஒரு மண்ணுளி பாம்பை போல!
எப்போது வருவாய்?
உன் வீட்டை விட்டு,
நம் வீடுக்கு? 
உனக்காக வாங்கிய உனக்கு பிடித்த
பட்டு புடவைக்கு
என்ன பதில் சொல்ல?


Friday 2 November 2012

அவள்
"கொன்ருவேன்" என்பது
கிள்ளி வைப்பது!
அவள்
"கொன்ருவேன்" என்பது,
கட்டிக்கொள்வது!
அவள்
"கொன்ருவேன்" என்பது
முத்தமிடுவது!
அவள் "கொன்ருவேன்" என்கையில்
சாவு வருமென்றால் , புன்னகையோடு ஏற்றுக்கொள்வேன் ;
எப்போதும் போலவே!