மேலும் மேலும் பூக்கள் தேடி
விதவிதமான தேனில் மயங்கும்
இந்த பட்டாம்பூச்சி
ஒரே இணையை
புணர்ந்து
பறந்து
மயங்கி
சரிந்து சாவும் !
ஒரே பூவில்
ஓராயிரம் முறை தேனெடுக்கும்
வித்தை தெரியவில்லை எனக்கு,
நான் வெறும்
மனிதப்புழு!
Tuesday, 26 March 2013
உணர்ச்சிபெருக்காய் எழுதிய கவிஞன்
உயிரோடிருந்தான்,
கொந்தளித்த கூட்டத்தில்
ஒருவன் கதை
பாழாய்ப்போன கதை!
***
ராஜ போஜனம் முடித்து
ராணியோடு சல்லாபித்து ,
ஆசுவாசமாய் உறங்கியெழுந்து
இன்று காலை கொண்டுவந்தான்
எங்களுக்கான புரட்சிகவிதை!
***
தியாகியென்றும்
போராளியென்றும்
ஊரே உன்னை கொண்டாட,
கரிக்கட்டையாய்
மீதம் கிடக்குதோ
அம்மா வைத்த திர்ஷ்டி பொட்டு?
இப்போது!
"எங்கெ சென்றுகொண்டிருக்கிறோம்?"கேட்டேன் நான்.
"தெரியாது !"என்றது நட்சத்திரம்.
என்ன செய்துகொண்டிருக்கிறாயென்று கேட்டது என்னை,
நானும் தெரியாதென்று சொன்னேன்.
48/48b உக்கடம் to பாட்டம்பாறை!
48b யின் வருகைக்காய்,
விலகி நின்று காத்திருக்கிறோம்,
இன்னும் கொஞ்சம் தாமதமாய் வரும்படி நீயும் ,
வரவே கூடதென நானும்
வேண்டிகொண்டிருக்கயில்
வருகிறது
பேருந்தும் மழையும்!
ஜன்னலோர துள்ளிகளோடு தொடர்கிறது
நம் மகிழ்ச்சியான மழை பேச்சு!
***
மூச்சுகாற்றின் உஷ்ணம் நிறையும்
இருக்கை கிடைக்காத
நெரிசல் பேருந்தில்,
ஒரு கையில் பைய்யும்
மறுகையால் கம்பியும்
பற்றியபடி நிற்கிறாள் அவள்.
கலைந்த முடியை
தலை திருப்பி சரிசெய்ய முயல்கையில்,
சட்டென கடக்கிறது
ஒரு பார்வையும்
ஒரு குளிர்காற்றும்!
***
கோவிலை கடக்கும் பேருந்து,
கண்கள் மூடி பிரார்த்தித்து
கன்னத்தில் போட்டு கொண்டு
கண்கள் திறந்த அவள் ,
தவறவிட்டாள்
எட்டிப்பார்த்த பிள்ளையாரை!
***
குழியிலிறங்கிய பேருந்தில்,
கண்ணாடி வளையலும் கம்பியும் முத்தமிட,
அதிர்ச்சியில் உறைகிறது
அவள் கைக்கடிகாரம்!
***
"அண்ணா, ஒரு ஆள் இறங்கணும்" என்கையில்
நிற்க்கிறது பேருந்து,
மனமும்!
***
முன் படியில் இறங்க வரும் ஆண்களையெல்லாம்
முறைத்து கொண்டிருந்தாள் …………
அவன் வரும் வரை!
****
எல்லோரும் நம்பி விடுங்கள்!,
இறங்கிய பின் ,
"டாட்டா"காட்டியது
அவள் தோழிக்காம்!
***
மூன்று முறை பதட்டமாகவும்,
எட்டு முறை
கள்ளத்தனமாகவும் பார்த்தாள்
அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்!
***
பாசாங்காய் ஒரு புன்னகையை
ஒட்டவைக்கும் அவள் முகத்தில்
அழுத களைப்பு தெரிந்தது,
அந்த ஸ்டிக்கர் பொட்டு ,
வீடு போகும்முன் ,
விழுந்ததோ,என்னவோ?
***
ஒரு புன்னகையும் 10 ரூபாயும் நீட்ட,
"கூட்டம் ஜாஸ்தி,
உன் ஸ்டாப்லயெல்லாம் நிறுத்தமாட்டேனென்று
சிரித்தபடி
பின்பக்கம் நகர்கிறார் .
"எல்லாரும் பத்து பத்தா குடுத்தா ,
சில்லரைக்கு நான் எங்க போறது???
கத்துகிறார் சிடுமூஞ்சி!
கோபமோ,புன்னகையோ ,
கியர் மாற்றிய பேருந்தாய் இயல்பாய் நகர்கிறார்
நடத்துனர் கருப்புசாமி அண்ணா!
***
சில்லரை பாக்கிகாக
சண்டையிட்ட முதியவர்
டாஸ்மாக்கில் இறங்கினார்!
***
அலறிக்கொண்டிருந்த அவனின் சீனா கைப்பேசி,
சிரித்தபடி பேச்சை துண்டித்தபின்
பாடத்தொடங்கியது!
***
பற்களை கடித்தபடி,
கண்களால் செய்கை செய்கிறாள் அவள்,
மேலெ வருகிறான் அவன்,
"ம்ம், அப்பிடி! சொன்னா கேட்டுக்கணும்
உன் நல்லதுக்குதாம்ப்பா சொல்றேன்"
நடத்துனர் சொல்கையில்
தலைகுனிந்து கள்ளமாய் சிரிக்கிறாள்!
***
எல்லா பேருந்திலும் காணமுடியும்,
ஒரு குழந்தை ,
அவன்(ள்) சிரிப்பு,
தன்னையும் குழந்தையாய் பாவிக்கும்
ஒரு முதியவர்!
***
அடிபட்டு ,
கைமுறிந்து,
கால் திருகி,
தலை பிளந்து,
என் மடிகிடந்து துடித்த ராதண்ணன்
"ஏதோ"சொல்ல வாய் திறந்து,
ஊற்றிய ஒரு கவளம் நீரில்
அடங்கிப்போனார்!
***
"எல்லோரும் பயணிக்கிறோம்,
எல்லோருமே வீடு சேர்வதில்லை"
இருக்கும் ,
எல்லோருக்கும் ஒரு பயணம்,
ஒரு 48b
பயணத்தில் பல கதை!
சினம் கொண்ட சிட்டுகுருவி!
"ஒரு மனுசன் இங்க காட்டு கத்தா , கத்திட்டிருக்கேன்,
அங்க என்ன பன்றே???"
தடதடவென்று முன்னால் வந்து,
முகத்தோடு முகம் பார்த்து
"டீவி பாத்துட்டிருக்கேன் " என்று,
சொல்வாளானால்,
"பாரு,பாரு" என்று
நழுவிவிடுவது உத்தமம்!
இரவு விளக்கு
கோபப்பட்டு திட்டும் நாளெல்லாம்
நான் ,உறங்கும் வரை
பாத்திரம் கழுவும் வேலை,அவளுக்கு !
அருகே வந்து படுத்ததும்
தாகத்தில் உறக்கம் தெளியும் எனக்கு!
அவள் கண்ணீரும்
என் நியாயங்களும்
இடைவெளி நிரப்பும் ;
இரவு விளக்கின் வெளிச்சம் போல!
Saturday, 23 March 2013
Thursday, 14 March 2013
*இரட்டை உலகம்*
நீ ,மதுவை மறைத்து
சுருட்டிக்கொண்டுவந்த காகிதத்தில்,
மார்க்ஸின் படம் இருந்தது.
என் நொறுக்குத்தீனி பொட்டண காகிததில்
இந்தபக்கம் ஒரு வளிப்பான நடிகையும் ஒரு கிசுகிசு வும் ,
அந்த பக்கம் குழந்தையை பற்றின கவிதையும் இருந்தது!
ஒன்றாக குடித்தோம்
விவாதித்தோம்
எப்போதோ உறங்கினோம்!
விடிந்த பின் ,
நம்மோடு
கொஞ்சம் புரட்சியும்,
கொஞ்சம் கவிதையும்
அறை நிறைத்திருந்தது.
நண்பா வா
சுத்தம் செய்யலாம்
வாந்தியை!
வேலைக்கு நேரமாச்சு!
வானம்
மீன் வளர்க்க ஆசைப்படுகிறாள்
ஆனந்த வர்ஷினி!
ஒரு பெரிய தண்ணீர் தொட்டியும்,
ஒரு குட்டி நிலாவும் வேண்டும்!
*ஆற்றங்கரை வீட்டுக்கூடம்*
வடகிழக்கு மூலையில் அமர்ந்து,
வரவு செலவு கணக்கு பார்க்கிரார்
கிருஷ்ணன் குட்டி தாத்தா,
தன் இரண்டு வயது மகனை
ஆங்கில பள்ளியில் சேர்ப்பது பற்றி,
அப்பாவோடு விவாதித்து கொண்டிருக்கிரார்
சுதாகரண்ணா.
"அறிவுள்ள புள்ளை எங்க படிச்சாலும் ,
படிக்கலேன்னாலும் ,
முன்னேறிக்கும் சுதாகரா,
கவனம் வேணும் கவனம்!
கடகெட்ட நாயி,
இவனெயெல்லாம் வளத்தி,ஆளாக்கி……………
எப்போதும் போலவே கடைசியில்
என் மீதுதான் வந்து விழும்
அப்பாவின் கோபம் !
"ட்டொக்கு,ட்டொக்கு வென்று
வெற்றிலை இடித்துக்கொண்டே,
"இந்த காலத்து புள்ளைகளுக்கு எங்க
இடுப்பு வளையுது???
சுச்சு போட்டா
தேங்கா அரைக்குது,
கொளம்பு வைக்குது,
அத்தன குப்ப கெடக்கு ,அடிச்சு விடறாளா பாரு"
பழமுத்தி என்று செல்லமாய் அழைக்கப்படும்
குறும்பை பாட்டியிடம் ,
குறைகள் அடுக்குவாள்
வேலம்மை பாட்டி,
ஏதேனும் ,பெண்கள் கதை பேசிக்கொண்டிருக்கலாம்
கதிர்வேலும் , டெய்லர் மணியும் !
தென்மேற்க்கில் ,
லாலிபப் சப்பிக்கொண்டே
குட்டி சைக்கிளில் வட்டமடிக்கிறாளொ, அம்மாவை நினைத்து அழுகிறாளோ,
தவிட்டு தாளிக்குள்
தவறி விழுந்து இறந்து போன
ரேவதிக்குட்டி.
Wednesday, 13 March 2013
*எச் எம் டீ கோஹினூர்*
அப்பா பெரும் கோபக்காரர்,
"எப்பிடீம்மா,
இந்த மீசக்காரர
கெட்டிக்கிட்டு வாழ்ந்தே?"
"இல்லேனா, உன்னமாரி,
ஒரு புள்ளைய பெத்து,
வளத்தீருக்க முடியுமா ராசா"
சிரித்த படியே ,
அப்பாவின் கதை சொல்ல தொடங்குவாள் ,அம்மா!
அவர் சினிமா கூட்டிப்போன கதை,
பழனியில் எனக்கு மொட்டைப்போட்டவனிடம்
சண்டையிட்ட கதை,
தன் அக்கா , தங்கையின் கல்யாணம் செய்துவைக்க
வெளியூர் வேலைக்கு சென்ற கதை,
ஓரிரு நாள் சாராயம் காய்ச்சிய கதை,
ஒழுகும் குடிசை மாற்றி
ஓட்டு வீடு கட்டிய கதை,
இன்னும் இன்னும் எத்தைனையோ கதைகள்,
கதைகளின் முடிவில் ,
கன்னம் கிள்ளி
முத்தம் தருகிறாள் எனக்கு!
திருமண புகைபடத்தில்,
பம்மி நிற்க்கும் அம்மாவின் அருகே,
கம்பீரமாய் என்னை பார்த்து சிரிக்கிறார்
மீசைக்காரர்.
மீசையை முறுக்கி விட்டு,
செல்லமாய் ,என் பின்னாந்தலை தட்டுவது போல,
லேசாய் ஒரு தட்டு கொடுக்க,
ஒடத்தொடங்குகிறது
அப்பாவின் எச் எம் டி வாட்ச்,
வீடு நிறைகிறது அவர் சிரிப்பு சப்தம்!
கணேஷ்மூர்த்தி சிவராமன்
*ம்மே*
கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கும்
ஆட்டு தலையின் நிலைக்குத்திய பார்வை
என்னை வெறிக்கிறது,
கறிவெட்டும் சப்தம் , கடந்த பின்னும்
காதில் ஒலிக்கிறது!
பச்சிறைச்சின் நெடியை கடக்கும்
ஒவ்வொரு முறையும்
கசாப்புக்கடை மரத்துண்டாய்
வெட்டுப்படுகிறது மனம்,
எனக்காகவும் சேர்த்தே
தன் பெருங்குரலெடுத்து அலறுகிறது
ஏதோ ஒரு ஆடு!
*சித்தார்த்தன் கதை*
யசோதரையின்
கண்ணீரில் வளர்ந்த
முட்செடிகளினூடே ,
கெளதம சித்தார்தன் பயணம் தொடர்ந்தான்,
பல யுகப்பயணம்,
ஆடை கிழிந்து
கால்கள் இடறி,
ஊணின்றி ,
உறக்கமின்றி
பலயுகம் !
அழுது களைத்த யசோதர
அழுகை துறக்க,
களைப்படைந்த சித்தார்த்தன்
பயணம் துறந்தான்,
மர நிழலில் ஓய்வெடுத்த
கெளதமன் தலையில்
உச்சிகிளை குருவியொன்று
எச்சமிட்டது!
வசந்தகாலத்தில்
பூக்களின் பாதையில்
திரும்பி வந்தான் புத்தன்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
*நாய் வாழ்க்கை*
கொழு கொழுவென்றிருக்கும் ,
பணக்கார நாய் !
ஜாக்கியென்றோ,டோமியென்றோ பெயரும்,
அதற்கான உணவும்,
அதனை அழைக்கும், கொஞ்சும்
மொழிபோலவே,
"புஜ்ஜூ"
"கோ அவேய்"
"கம் ஹியர்"!
அதற்கென்று ஒரு வீடு…………,
ஒரு மருத்துவர்…………,
நடை பயிற்ச்சியின் போது
ஒரு காவலாளி,……………
பரிபூரண சுக செளக்கிய வாழ்வு!
இதையெல்லாம் விட பெரிய விஷயம்;
மணி என்றோ,
குட்டி என்றோ,
நாம் பன்னை பிய்த்து வீசுகையில்
வாலாட்டி ஓடி வரும்
எலும்பின்மேல் தோல் போர்த்திய
ஏழை நாய் போல
அவை, சாலையில் அடிபட்டு
அனாதயாய் செத்து கிடப்பதில்லை!