Tuesday 26 March 2013

48/48b உக்கடம் to பாட்டம்பாறை!

48b யின் வருகைக்காய்,
விலகி நின்று காத்திருக்கிறோம்,
இன்னும் கொஞ்சம் தாமதமாய் வரும்படி நீயும் ,
வரவே கூடதென நானும்
வேண்டிகொண்டிருக்கயில்
வருகிறது

பேருந்தும் மழையும்!
ஜன்னலோர துள்ளிகளோடு தொடர்கிறது
நம் மகிழ்ச்சியான மழை பேச்சு!

***
மூச்சுகாற்றின் உஷ்ணம் நிறையும்
இருக்கை கிடைக்காத
நெரிசல் பேருந்தில்,
ஒரு கையில் பைய்யும்
மறுகையால் கம்பியும்
பற்றியபடி நிற்கிறாள் அவள்.
கலைந்த முடியை
தலை திருப்பி சரிசெய்ய முயல்கையில்,
சட்டென கடக்கிறது
ஒரு பார்வையும்
ஒரு குளிர்காற்றும்!

***
கோவிலை கடக்கும் பேருந்து,
கண்கள் மூடி பிரார்த்தித்து
கன்னத்தில் போட்டு கொண்டு
கண்கள் திறந்த அவள் ,
தவறவிட்டாள்

எட்டிப்பார்த்த பிள்ளையாரை!

***

குழியிலிறங்கிய பேருந்தில்,
கண்ணாடி வளையலும் கம்பியும் முத்தமிட,
அதிர்ச்சியில் உறைகிறது
அவள் கைக்கடிகாரம்!

***

"அண்ணா, ஒரு ஆள் இறங்கணும்" என்கையில்
நிற்க்கிறது பேருந்து,
மனமும்!

***

முன் படியில் இறங்க வரும் ஆண்களையெல்லாம்
முறைத்து கொண்டிருந்தாள் …………
அவன் வரும் வரை!

****
எல்லோரும் நம்பி விடுங்கள்!,
இறங்கிய பின் ,
"டாட்டா"காட்டியது
அவள் தோழிக்காம்!

***

மூன்று முறை பதட்டமாகவும், 
எட்டு முறை
கள்ளத்தனமாகவும் பார்த்தாள்

அவளையேதான்  பார்த்துக்கொண்டிருந்தான்!
***

பாசாங்காய் ஒரு  புன்னகையை
ஒட்டவைக்கும் அவள் முகத்தில்
அழுத களைப்பு தெரிந்தது,
அந்த ஸ்டிக்கர் பொட்டு ,
வீடு போகும்முன் ,
விழுந்ததோ,என்னவோ?

***

ஒரு புன்னகையும் 10 ரூபாயும் நீட்ட,
"கூட்டம் ஜாஸ்தி,
உன் ஸ்டாப்லயெல்லாம் நிறுத்தமாட்டேனென்று
சிரித்தபடி
பின்பக்கம் நகர்கிறார் .

"எல்லாரும் பத்து பத்தா குடுத்தா ,
சில்லரைக்கு நான் எங்க போறது???
கத்துகிறார் சிடுமூஞ்சி!
கோபமோ,புன்னகையோ ,
கியர் மாற்றிய பேருந்தாய் இயல்பாய் நகர்கிறார்
நடத்துனர் கருப்புசாமி அண்ணா!

***

சில்லரை பாக்கிகாக
சண்டையிட்ட முதியவர்
டாஸ்மாக்கில் இறங்கினார்!

***

அலறிக்கொண்டிருந்த அவனின் சீனா கைப்பேசி,
சிரித்தபடி பேச்சை துண்டித்தபின்
பாடத்தொடங்கியது!

***

பற்களை கடித்தபடி,
கண்களால் செய்கை செய்கிறாள் அவள்,
மேலெ வருகிறான் அவன்,

"ம்ம், அப்பிடி! சொன்னா கேட்டுக்கணும்
உன் நல்லதுக்குதாம்ப்பா சொல்றேன்"
நடத்துனர் சொல்கையில் 
தலைகுனிந்து கள்ளமாய் சிரிக்கிறாள்!
***

எல்லா பேருந்திலும் காணமுடியும்,
ஒரு குழந்தை ,
அவன்(ள்) சிரிப்பு,
தன்னையும் குழந்தையாய் பாவிக்கும்
ஒரு முதியவர்!

***

அடிபட்டு ,
கைமுறிந்து,
கால் திருகி,
தலை பிளந்து,
என் மடிகிடந்து துடித்த ராதண்ணன்
"ஏதோ"சொல்ல வாய் திறந்து,
ஊற்றிய ஒரு கவளம் நீரில்
அடங்கிப்போனார்!

***

"எல்லோரும் பயணிக்கிறோம்,

எல்லோருமே வீடு சேர்வதில்லை"

இருக்கும் ,
எல்லோருக்கும் ஒரு பயணம்,
ஒரு 48b
பயணத்தில் பல கதை!


No comments:

Post a Comment