Saturday 25 May 2013

பூவாலஜி

முதல் புன்னகையும்
முதல் காதலும்
நிகழ்ந்த கணத்தில்தான் பூத்திருக்கும்
முதல் பூ .
அல்லது ;
முதல் பூ பூத்த கணத்தில் நிகழ்ந்திருக்கலாம்
எல்லாம்!

********

பூ
ஆணிவேரின் புன்னகை .

********

கனிவாய் ஒரு பார்வை
எரித்துவிடும் ஒரு பார்வை
நிராகரித்து விலகிச்செல்லும்
இன்னொரு பார்வை 
இருந்தும் ,மீண்டும்
உன் பார்வைக்காக
ஏங்கி தவமிருக்கும்
சூரிய காந்தி பூ நான்!

********

பெண்குழந்தை பெற்ற தாய்
பூச்செடி வளர்ப்பாள் .

குழந்தையில்லா 'தாய்'
பூ வளர்ப்பாள் .

******

மனைவி வீட்டோடு
மகன் காட்டோடு
பூவும்
உன்னோடு சேர்ந்து புதையும்!

*****

செண்பக பூ பறிக்க
மரம் ஏறியவள்
முதல் புதுமைப்பெண்
அல்லது
புரட்சிக்காரி.

*****
செண்பக பூ பறிக்க
மரம் ஏறியவள்
முதல் புதுமைப்பெண்
அல்லது
புரட்சிக்காரி.

*****

இந்த பிரபஞ்சமே ,ஒரு மலர்க்காடுதானே?

*****
வாழைப்பூ சேமித்து வைத்த
தேன் துளி போல,
உனக்கு தரமுடியாத முத்தங்கள்
என் பிள்ளைக்கு!
*****

உன் பின்னால் வரும் ,என்னை
வேடிக்கை பார்க்கும் கனகாம்பரம் ,தோழிகள் .
அந்த ஒற்றை ரோஜா, ராஜகுமாரி .
நீ மாட மாளிகை!

*******

ஆண் ,தன் காதலை
நண்பனிடம் சொல்வான்.
பெண் ,தன் காதலை
பூவிடம் சொல்வாள்!

*****
மல்லிகைப்பூவின் மொழி தெரிந்தவன்
மனைவியை நேசிக்கிறவன்!

*******

பூக்களால் அடையாளம் கண்ட உடலை ,
சில நூறுகளில்
தீண்டி விடலாம்  .

வாசனைகள் வெளியிடும் ஆன்மாவை
யாரால் ஸ்பரிசிக்க இயலும் ???
காதலற்ற நாசிகள்
நாசமாய் போகட்டும்!

*******

ஆதி முத்தத்தை
பார்த்த வெட்கத்திலோ,
இன்னும் சிவந்திருக்கின்றன
வேலி செம்பருத்திகள் .

*****
நீ பறித்த அத்தனை செடிகளும்
விதவையாகின,
நீ சூடிய அத்தனை பூக்களும்
சொர்க்கமேகின!

******
ஆண்களுக்கு பெண்கள்;
கள்ளிப்பழம்.

பெண்களுக்கு ஆண்கள் ;
கள்ளிப்பூ

******

சிவலிங்கத்தை காக்கும்
நாகலிங்க பூ போல
நம் காதலையும்
பொத்தி பொத்தி காத்திடுவேன்

நீயும்  இறையும்
எனக்கு ஒன்றுதான் .

******

நீ
மஞ்சள் தேய்த்து குளிக்கும்
என் செண்டுமல்லி!

*****

வண்ணமும் வடிவமும் வாசனையும்
பூவுக்கு பூ வேறுபடுவது போல,
காதலும்  ,மனிதருள் மாறுபடும்!

******

மலர்தல் ஞானம்
வாசனை அன்பு
உதிர்தல் வீடுபேறு .

****

நட்டதும், வளர்த்ததும் நீயென்று
உரிமையெடுக்காதே,
"மலர்ந்தது "அது.

*******
பெயர் தெரியாத பூக்களுக்கு
பெண்ணின் பெயர் மிகப்பொருத்தம்,
பெயர் தெரியாத பெண்ணிற்க்கு
பூவின் பெயர் பொருந்துவதில்லை!

*****

பூ ,
அம்மனுக்கு
சுமங்கலி வரம் கொடுக்கும்!

*****-

புத்தனில் மலர்கிறது நீல பத்மம்,
நீல பத்மமாய் பிறக்கிறான்
புத்தன்!

******
மனதிற்குள்
காதல் இருக்கிறது தானே?
பூவின் கீழ் விதையிருப்பது போல!

No comments:

Post a Comment