Tuesday 11 December 2012

தாத்தா பூச்சி

தனிமையில் நடுங்கியபடி
உன்னை போர்த்திக்கொள்கிறேன்
காய்ச்சல்கார இரவுகள்.

***

இருவரின் நெருக்கங்களில், கோரைபல் காட்டும்
இரு தனிமைகள்.

***

பாதையை கடக்கிறது ,
ரயில் பூச்சி
வாகனங்கள் வராதிருக்கட்டும்.

***

கடைசி சொட்டையும் பருகி,
பெருமூச்சோடு கோப்பை வைத்த பெரியவர்,
எந்த நினைப்பை , உறுஞ்சியிருப்பார்???

***

வெட்டப்பட்ட மரம்
சிதறிப்போன கூடு
உடைந்த முட்டைகள்,
இரைகொத்தி திரும்பிய தாய்குருவி,
இரவெல்லாம் ஓலமிடும்,
யாருக்கு கேக்கும்???

***

காதலின் இரவுகள்
தனிமையின் மெளனங்கள்
தேநீர் கோப்பையின் விளிம்பு
அடர்காட்டின் அமைதி
அருவியின் இரைச்சல்
குப்பை பொறுக்கும் பால்யம்
பசித்து கைநீட்டும் முகம்

***

எங்கோ தொடங்கி
எங்கோ முடியும்
ஏதோ ஒரு கவிதை

***

சிக்கி
திணறி
அலைக்கழிந்து
கொண்டாட்டமாய் மேலேறி
கீழிறங்கி
உருண்டோடி
விழுந்து ,
காற்றோடு பாடிச்செல்லும் ,
வெள்ளெருக்கின் விதையொன்று…………
பாதைகளற்ற, நம்மைப்போல!


No comments:

Post a Comment