Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Tuesday, 22 October 2013

மழை இரவுகள்

உனக்கான குறுஞ்செய்தியை தட்டச்சி க்கொண்டிருக்கையில்
என் கைபேசி
ஒரு பியானோவாய் மாறி விடுகிறது பெண்ணே
கறுப்பும் வெள்ளையுமான உணர்ச்சிகளின் விசைகளிருந்து
உனக்கான ஒரு கவிதையும்
என் முகத்தில் ஒரு புன்னகையும் உருவாகிறது
மனதோடு நெருக்கமாய்
சிரிக்கும் உன் பூ முகம் என் நெஞ்சம் நிறைக்கிறது
என்னை நிரப்பி வழிந்தோடும் இசையென
காற்றோடு கலக்கிறது மூச்சு.

*****-

மழை இரவில் மின்னலொளியில்
தூரத்தில் தென்பட்ட குளத்தின் காட்சியென
சட்டென கடக்கும்
பிரியும் பொழுதின்
உன் கண்ணீர் முகம்

******

மழை
கடவுளின் உளவாளி 
நம் ரகசியங்களை ஒற்றறிவது பணி.

*****

ஒன்றோடொன்று பின்னி புணர்ந்து
உன்னையும் என்னையும் நினைவுபடுத்திய
அந்த ஆலம்வேர்
இந்நேரம் முழுக்க நனைந்திருக்கும் .

****

மழை ஓய்ந்த நிசப்தம் போல
நீ  உறங்குறாய்
ஊடல் கொண்ட
உன் கோபங்களை சொன்னபடி
இன்னும் சொட்டிக்கொண்டிருக்கிறது
வெளியே மழை.

******

உன் கதகதப்பில்
நானிருக்கும் இந்த மழை
யுகம் தீரும் வரை பெய்ய ஏங்கி கிடக்கிறேன்
அல்லது
உயிர் தீரும் வரையாவது  .

Tuesday, 11 June 2013

மழை நின்ற பின் ஒரு சிகரெட்



இப்பொழுதெல்லாம்
மழையில் நனைவதில்லை
மழையை ரசிப்பதில்லை
மழைக்கவிதைகள்
முழுதாய் வாசிப்பதில்லை
வெறும் ,வேடிக்கை மட்டும்தான்
அமைதியாக அமர்ந்து
அப்படியே பார்த்துக்கொண்டிருப்பேன்
அதுதான் பிடிக்கிறது
மெதுவாய்
மெது மெதுவாய்
உள்ளங்காலிலிருந்து உச்சிக்கு ஏறும்
அந்த குளுமை
அது,
அதுதான்
மழைநேரத்தில்
தேவையாக இருக்கிறது,
கல்யாணமான புதிதில் ,இவள்
தேநீர் எடுத்து வந்தாள்
பறக்கும் அந்த ஆவியும்
அந்த கதகதப்பும் அன்றைய மழைநாளின்
உன்னுடைய மூச்சுக்காற்றை
நினைவுபடுத்தியதிலிருந்து
நான் இப்படிதான்!