Tuesday, 30 June 2015

கொஞ்சம் பூக்களுடன்

உனக்கான காத்திருப்பில் -
உனக்கான காத்திருப்பில்
பல நூறு வருடம் மழையும் வெயிலுமேற்று நிற்கும்
ஒரு ஆலமரமாகிறேன்

உன்னோடிருக்கும் கணத்தில்
உள்ளுள் ஒரு நதியின் பயணம் உணர்கிறேன்
நாம் பிரிந்து செல்லும் நிமிடங்களில்
பட்டம் துரத்தி செல்லும் ஒரு சிறுவனாகி
வினாடிகளை பிடிக்க முயல்கிறேன்

நீ வேடிக்கை பார்த்து சிரித்து ரசிக்கிறாய், கோணவாச்சீ

நான்

ஒரு பூச்செடி
ஒரு பழ மரம்
உபயோகப்படலாம் உங்களுக்கு
ஆனால்
பூக்களில்லாத
பழங்களில்லாத
முள் செடிக்குமானது 
இந்த உலகம்
விலகி நடக்க பழகலாம் நீங்கள்
அல்லது வெட்டி விடலாம்
ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுங்கள்
உங்கள் குணம் போல

மீண்டும் துளிர்க்கையிலும்
முள்ளே வரும்
அதன் குணம் மாறுவதில்லை!

கொலுசிடும் சாக்கில்
உன் கால்களில்
விரல்  தீண்டுகிறேன்  நான்

பெருங்காதல் பொங்கும் பார்வையால்
கண்களால் எனை நனைக்கிறாய்  நீ

"சலக்க்"கென சிரித்து
பொது இடமென நினைவுபடுத்துகிறது 
கொலுசின் முத்துமணி

வெட்கப்பூ

பட்டுசேலையுடுத்தி
மங்கல தாலமேந்தி
திருவிளக்கொளியில் முகம் ஜொலிக்க
நீ வெட்கத்தில் தலைகுனிந்து
வலம்வைத்து வணங்கும்
மணக்கோல வர்ணங்கள் நினைவில் வரும்
மலர்ந்து மண்பார்க்கும் மலரொன்றை காண்கையிலே

இதிஹாசம்

நான் பீமன்
நீ அட்சய பாத்திரம்.

திருவிழா கூட்டத்தில்
தொலைவிலிருந்து
சாமியை தொழும்
ஒரு பக்தனாகிறேன்
சாமியை பார்க்க முடிவதில்லையெனினும்
சாமி அங்கிருப்பதே போதுமானதாகி விடுகிறது  பக்திக்கு
உன்னை பார்க்காவிடினும்
நீ வரும் திசை பார்த்து
காதலிக்கிறேன்.

நான்கு சென்ட் வானமும் நாலைந்து நட்சத்திரமும்

உன் வருகைக்கு காத்திருக்கிறேன் நான்
நீ வர காத்திருக்கிறது
கனகாம்பரம்
செம்பருத்தி
நந்தியார்வட்டம்
அரளி
நம் சிறு வீடு
மாமரம்
நான்கு சென்ட் வானம்
அதில் நாலைந்து நட்சத்திரம்