Wednesday, 28 November 2012

மாலகோவில்

மஞ்செ அரைக்கும் புள்ளே,
மனசுக்குள்ளே நெறஞ்ச புள்ளே ,
புதுசா சமஞ்ச புள்ளே,
பூக்கோலம் போட்ட புள்ளே,
மைக்கண்ணால் சேதி சொல்லு
மாமன் உன்ன தூக்கிபோறேன்!
மாலகோவில் நோம்பிக்கு ,நான்
மை,வளையல்
வாங்கித்தாறேன்

****

போர்வைக்குள் புகுந்து விட்ட
பூரான போல,
நெஞ்சுக்குள் நெளியுதடா
உன் நெனப்பு!
வார்த்தையெல்லாம்
கொடுக்குத்தேளு,
பாக்கும் பார்வை
செங்குளவி,
ஆச, வெஷம் தலைக்கு ஏற,
தள்ளாடி தவிக்கிரேன் நானு ,
தாங்கி புடிக்க யாருமில்ல!
நீ ,கண்டாஙி சேல தர
காலமெல்லாம் காத்திருப்பேன்!
பாதையெல்லம் பாத்திருபேன்!


*மழையும் , வெயிலும்*

நின்று எரிந்த சடலங்களாய்
கருகி செத்த பூச்செடிகள்.
உடைந்த செங்கல்லும்,
ஒற்றை செருப்பும் ,
ஜல்லி கற்களும்
உள்ளே சிதறிய
தண்ணீர்த்தொட்டி.
முற்றம் முழுதும்  கலைந்து கிடக்கும்
மழையில் ஓடிவந்த
காலடித்தடங்கள்.
உடைத்து நொறுங்கிய
பீர் பாட்டில்.
உபயோகித்து வீசிய
ஆணுறை பாக்கெட்.
தூரத்து
பாழ்மரப்பொந்தில்
குஞ்சு தத்தை
"கீச்சொலி"யெழுப்ப குழந்தையின் அழுகையும்,
அம்மாவின் கொஞ்சலும் ,
அப்பாவின் அதட்டலும்
காற்றில் தேடி ,
தன்னகத்து தனிமையில்
மரணித்துக்கொண்டிருக்கும்
ஊருக்கு வெளியே ,
ஓடுகள் உடைந்த
ஒற்றை வீடு!


Tuesday, 27 November 2012

சில ,பல கேள்விகளில்
முடிந்து விடுகிறது
அடிபட்டு கிடக்கும்
வாழ்க்கை!

கம்பளிக்குள்
நீயில்லாத இரவில்
எதற்கு பெய்கிறதிங்கே ?
இந்த பேய்மழை.

****

பூச்செடியின் கீழ்
உதிர்ந்து கிடக்கிறது,
நேற்றைய மழைஇரவு

****

அடுப்பூதும் தாயாய்
மூச்சு திணறி சமைகிறேன்
உனக்கான , கவிதையை!
அருகில் ,நீயில்லாதா
கவிதையை!


Sunday, 25 November 2012

தீராப்பெருங்கதை


என் விடுமுறை நாட்களில் மட்டும்,
துண்டை மறந்து,
குளிக்க செல்லும்
மறதிக்காரி!

***

"கொஞ்சம் இங்க வாங்க"
உள்ளாடைக்கு கொக்கி போட
உத்தரவிட்ட மகாராணி ,
முதுகில் கை பட்டால்
முறைப்பாள்!

*** 

ஒப்பனை முடித்து கிளம்பையில் ,
பின்னாலிருந்து அணைத்தால்,
என் பெயர் சொல்லி கத்துவாள்,
பேரழகி பிசாசு!

***

என் அத்தை மகள்களை பற்றி
இன்னும் ,எத்தனை கதை

வைத்திருக்கிறாளோ?
புரளியை கிளப்பும்
பொல்லாதவள்!

***

என்னோடு பேச வரும்
பெண்களையெல்லாம்
தன் புடவை பற்றி பேச வைக்கும்
கெட்டிக்காரி!

***

சிரித்தபடி எச்சரிப்பாள்,
"அங்க ஆம்பிளைங்க பக்கம் இருங்க,
வந்துர்ரேன்"!

***

"டேய்"என்பதும் "புருசங்காரா" என்பதும் ,
குறிப்பறிவித்தல்!
"கருமீ" சொல்கயில் மட்டும்
கள்ளசிரிப்பாய்
கடக்கும்,
திருடி!

***

வரும் வழியெங்கும் ,
அமைதியின் வடிவாய் இருப்பாள்,
இன்னும், இரண்டு நாட்கள்,
சிரித்து,
அழுது,
ஆர்ப்பாட்டம் செய்து
பேசி,பேசி
கொல்லபோகும்
பொண்டாட்டிக்காரி!

***

மனைவியுடன் சேர்ந்து போகும்
கல்யாண கதைகள்,
மகாபாரத கதைகள் விட,
நீண்டு போகும்!


ஏற்பு

காத்திருக்கிரேன்,
முதலில் வருவது,
நீயாக  இருந்தால்,
நலம்!
இல்லையா;
மிக்க நலம்!

நழுவுதல்


கட்டடத்திலிருந்து விழுவதாய்
கனவு கண்டேன் !
தரையா,
விழிப்பா,
இருட்டா,
நடுக்கமா?
எது நீ?